தங்கநகை திருட்டு போய் பெட்ரோல்,டீசல் திருட்டு வந்தாச்சு : தேனி கூத்து

பெட்ரோல், டீசல் திருட்டு அதிகரிப்பு: புதிய பிரச்னையால் போலீசாருக்கு தலைவலி

Update: 2021-08-02 09:30 GMT

எரிபொருள் திருட்டு மாதிரி கார்ட்டூன் படம்.

தேனி மாவட்டத்தில் வாகனங்களில் பெட்ரோல், டீசல் திருடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த புதிய பிரச்னையால் போலீசாருக்கு தலைவலி உருவாகி உள்ளது.

நாடு முழுவதும் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயினை கடந்து உள்ளது. தேனி மாவட்டத்தை பொறுத்தவரை வாகனங்களை வைத்திருப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்களது வாகனங்களை இரவில் வீட்டு முன்னர் உள்ள ரோட்டோரத்தில் தான் நிறுத்துகின்றனர். இப்படி நிறுத்தப்படும் வாகனங்களில் இருந்து நள்ளிரவில் சிலர் பெட்ரோல், டீசல் திருடி விடுகின்றனர். ஒரு வாகனத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் எடுத்தால் போதும் 100 ரூபாய் கிடைத்து விடும். ரோட்டோரம் தானே வாகனங்கள் நிற்கின்றன. அல்லது காம்பவுண்ட் சுவருக்கு உள்ளே நிறுத்தியிருப்பார்கள். காம்பவுன்ட் சுவரை தண்டி உள்ளே குதித்து பெட்ரோல், டீசல் திருடுவது ஒன்றும் பெரிய விஷயமும் இல்லை.

குறைந்தபட்சம் தினமும் 10 முதல் 20 வாகனங்களில் திருடினாலே குறிப்பிட்ட அளவு பணம் சேர்ந்து விடும். இதனால் வாகனங்களில் பெட்ரோல், டீசல் திருட்டு அதிகரித்து வருகிறது. தேனி மாவட்டம் முழுவதுமே பரவலாக இந்த பிரச்னை காணப்படுகிறது. பெட்ரோல் டீசல் திருடும் இவர்கள் யார்? திருடிய பெட்ரோல், டீசலை எங்கு விற்பனை செய்கின்றனர் என்பது உட்பட எந்த விவரமும் போலீசாருக்கு தெரியவில்லை. அவர்கள் ரோந்து செல்லும் போது எங்காவது மறைந்து கொள்வதால் கண்டுபிடிக்கவும் முடியவில்லை.

பெட்ரோல் திருடப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் அவசரமாக கிளம்பும் நேரத்தில் தான் பெட்ரோல் திருடப்பட்டுள்ளதை கவனிக்கின்றனர். அதன் பின்னர் வாகனங்களில் பெட்ரோல் நிரப்பி செல்ல அவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் மன உளைச்சலில்  சிக்கி சிரமப்படுகின்றனர். இந்த தலைவலியை எப்படி கையாள்வது என்பது தெரியாமல் மாவட்ட போலீஸ் நிர்வாகம் தவிக்கிறது.

Tags:    

Similar News