காலையில் மனு..! மாலையில் நடவடிக்கை..! தேனி கலெக்டர் முரளீதரன் அதிரடி
Theni Collector News Tamil -தேனி பாரஸ்ட் ரோடு பகுதியில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு செய்வதாக இந்து எழுச்சி முன்னணியினர் காலையில் புகார் கொடுத்தனர். மாலையில் வாகனங்களுக்கு கலெக்டர் அபராதம் விதித்தார்.
Theni Collector News Tamil -தேனி பாரஸ்ட் ரோடு, சற்று அகலம் குறைவானதாக இருந்தது. பாரஸ்ட் ரோட்டில், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறையின் சார்பில் செயல்பட்டு வரும் நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. மிகப்பெரிய பள்ளி வளாகமான இதில், ரோட்டிற்கு இடம் வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டது. அந்த கோரிக்கையினை ஏற்று, பள்ளி நிர்வாகமும் பாரஸ்ட் ரோட்டிற்கு தனது நிலத்தில் இருந்து, இடம் ஒதுக்கி கொடுத்தது.
அதுவும் அரை கி.மீ., நீளத்திற்கும் அதிக துாரம், ரோட்டோரம் தனது பள்ளிக்கு சொந்தமான இடத்தில் 6 அடி துாரத்தை பள்ளி நிர்வாகம் வழங்கியது. இப்படி கூடுதலாக கிடைத்த இடத்தில் நகராட்சி நிர்வாகமும் தார்ரோடு அமைத்து கொடுத்தது. அப்பாடா... இனி பிரச்னை இருக்காது என நினைத்த போது, வாகன ஓட்டிகள் கூடுதலாக கிடைத்த இடம் முழுக்க தங்கள் வாகனங்களை நிறுத்தி வைத்தனர். சில இடங்களில் சாலையோர சிறு வியாபாரிகள், ரோட்டோர கடைகளை அமைத்தனர்.
இதனை மாற்றி அமைக்கவும், ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துபவர்களை அகற்றவும் பள்ளி நிர்வாகம் எவ்வளவோ முயன்றும் பலன் கிடைக்கவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்தது. குறிப்பாக பாரஸ்ட்ரோட்டினை ரயில் கடக்கும் போது, ரயில்வே கேட்டினை மூடி திறந்த பின்னர், நெரிசல் சரியாக ஒருமணி நேரம் வரை ஆகிறது.
இந்த சிரமத்திற்கு விடை காண, பாரஸ்ட்ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக்கூறி, தேனி கலெக்டர் முரளீதரனிடம் இந்து எழுச்சி முன்னணி தேனி நகர தலைவர் செல்வபாண்டியன் தலைமையில் நகரதுணைதலைவர் சிவா, நகரச்செயலாளர்கள் ஜீவானந்தம் , புயல் அய்யப்பன் , நகர துணைசெயலாளர்கள் பிரேம், கார்பெண்டர் சரவணன் ஆகியோர் உடன் இருந்து மனு கொடுத்தனர். கலெக்டரிடம் பிரச்னையின் முக்கியத்துவம் குறித்து விளக்கி கூறினர்.
உடனடியாக தேனி எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரேவை தொடர்பு கொண்டு கலெக்டர் இதுபற்றி ஆலோசித்தார். எஸ்.பி., உத்தரவுப்படி தேனி போக்குவரத்து போலீசார் இன்ஸ்பெக்டர் தட்ஷிணாமூர்த்தி தலைமையில் களம் இறங்கினர். ரோட்டோரத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு, அபராதம் விதித்து அகற்றினர். கடைகளையும் அகற்றினர். ரோடு அகலமானதை தொடர்ந்து நேற்று மாலை முதல் தற்போது வரை போக்குவரத்து சீராக இருந்து வருகிறது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
மாலையில், வாகன ஆக்கிரமிப்புகளை அகற்றிய போக்குவரத்து போலீசார்
பாரஸ்ட் ரோடு தேனியின் மிக முக்கியமான ரோடு என்பதால், ஆக்கிரமிப்பினை அகற்றிய போலீசார், இனிமேல் ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் தேனி பெரியகுளம் ரோடு, மதுரை ரோடு, கம்பம் ரோடுகளிலும் ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2