போடி அருகே பெரியாற்று கோம்பையில் வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

தேனி மாவட்டம் போடி பெரியாற்றுக் கோம்பையில் வெள்ளத்தில் சிக்கி புதுமணத்தம்பதி உட்பட3 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-10-16 15:26 GMT

தேனி மாவட்டம் போடி, சுப்புராஜ் நகர் புது காலனியில் வசிப்பவர் சஞ்சய் (வயது 24.) இவர் லண்டனில் வசித்து வருகிறார். இவரது தந்தை முன்னாள் ராணுவவீரர் ஆவார். இவரின் தாய் உடன் பிறந்த மாமா ராஜா என்பவருக்கும், கோவையை சேர்ந்த காவியா என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு சஞ்சய் வரவில்லை. எனவே விடுமுறையில் அதன் பின்பு வந்த சஞ்சய் தனது தாய் மாமாவை போடியில் உள்ள தனது வீட்டிற்கு விருந்திற்கு அழைத்திருந்தார். விருந்திற்கு வந்திருந்த ராஜா, தனது மனைவி மற்றும் சஞ்சையுடன் சேர்ந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள பெரியாற்றுக் கோம்பை பகுதிக்கு குளிக்க சென்றிருந்தார். இவர்களுடன் உறவுக்கார சிறுவன் பிரணவ்( வயது 12 )என்பவரும் சென்றிருந்தார்.

இவர்கள் நால்வரும், பதினெட்டாம்படி என்ற இடத்தில் ஆற்றில் இறங்கியதும் பாறையில் வழுக்கி விழுந்தனர். நால்வரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். சிறுவன் பிரணவ் மட்டும் எப்படியோ தப்பி கரையேறினார். அருகில் இருந்த ஒத்தக்கடையை சேர்ந்த ராமராஜ் என்பவரிடம் சென்று நடந்ததை கூறியுள்ளார். உடனே ராமராஜ் காவல்துறையினருக்கும், வனத்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மூவரின் உடலையும் மீட்டெடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தினர். திருமணம் முடிந்து ஒரு மாதமே ஆன புதுமண தம்பதியினர் உட்பட 3 பேரும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வரும் நிலையில், தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகமும், தீயணைப்புத்துறையும் அருவிகள், ஆறு, குளங்கள், கண்மாய்களில் குளிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். குறிப்பாக போடி பகுதியில் நேற்று முன்தினம் இருந்து பெரும் மழையும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் இந்த வெள்ளப்பெருக்கு குறித்து சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். போடி மெட்டு மலைப்பாதையினையே பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர். இறந்த தம்பதியினர் கோவையை சேர்ந்தவர்கள். உடன் சென்றவர் லண்டனில் வசித்தவர். இவர்களுக்கு போடி பகுதி நீர் நிலைகளின் அபாயம்  தெரியவில்லை. உடன் இருந்த  உறவினர்களாவது அவர்களை அறிவுறுத்தி இருக்கலாம். இப்படி அனைவரும் சேர்ந்து கவனக்குறைவாக நடந்து கொண்டதால் புதுமணத்தம்பதி உட்பட மூவர் உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவம் தேனி மாவட்டம் முழுவதும் பெரும் எச்சரிக்கை உணர்வை உருவாக்கி உள்ளது. இனிமேலாவது நீர்நிலைகளில் குளிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுருளிஅருவி, கும்பக்கரை அருவி, சின்னசுருளி அருவி, அணைக்கரைப்பட்டி தடுப்பணை, பெரியாறு, கொட்டகுடி ஆறு, வராகநதி, வைகை நதி பகுதியில் வனத்துறையும், தீயணைப்புத்துறையும், பொதுப்பணித்துறையும், போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News