தமிழக அரசு பஸ்ஸை திரும்பி அனுப்பியதற்கு பெரியாறு பாசன விவசாயிகள் கண்டனம்

Mullaperiyar News- தேக்கடிக்கு சென்ற தமிழக அரசு பஸ்ஸை கேரள வனத்துறை திரும்பி அனுப்பியதற்கு பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கம் கண்டனம்;

Update: 2022-07-28 05:15 GMT

முல்லை பெரியாறு அணை(பைல் படம்)

Mullaperiyar News- தேக்கடிக்கு சென்ற தமிழக அரசு பஸ்சை கேரள வனத்துறை திரும்பி அனுப்பியது அட்டூழியத்தின் உச்சம் என பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் இ.சலேத்து, பொன்.காட்சிக்கண்ணன், மை.தாமஸ், ச.அன்வர் பாலசிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியுள்ளதாவது:

சமீப காலமாக கேரள வனத்துறைக்கு கொம்பு முளைத்திருப்பதாக உணர்கிறோம். 20 ஆண்டுகளுக்கு மேலாக மதுரையில் இருந்து தேக்கடிக்கு சென்று வரும் அரசுப் பேருந்தை தேக்கடிக்கு செல்ல விடாமல் பெரியாறு புலிகள் காப்பக கடை நிலை அதிகாரிகள் திருப்பி அனுப்பியிருப்பது, திட்டமிட்ட செயல்தான் என்று குற்றம் சாட்டுகிறோம்.

பெர்மிட் இல்லை என்று தமிழக அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் திருப்பி அனுப்புவதற்கு காரணம் சொன்ன பெரியாறு புலிகள் காப்பக வனத்துறை ஊழியர்கள், அதையே சற்று மாற்றி,போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் திருப்பி அனுப்பினோம் என்று மத்திய உளவுத்துறையிடம் சொல்லியிருக்கிறார்கள்.வார விடுமுறை நாட்கள் என்றால் கூட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கூட்டம் எதுவுமற்ற செவ்வாய்க்கிழமையில் என்ன போக்குவரத்து நெரிசல் என்பதை, வனத்துறை ஊழியர்கள் தெரிவிக்க வேண்டும்.

மேலாக போக்குவரத்து துறைக்கு என்று கேரளாவில் Motor Vehicle Division இருக்கும்போது வனத்துறைக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார்...? இரண்டு மாநிலத்திற்கிடையே ஓடும் ஒரு அரசு பேருந்தின் பெர்மிட்டை சோதிக்க வேண்டிய அதிகாரம் வனத்துறைக்கு எப்போது வந்தது...? குமுளி சோதனை சாவடியில் உள்ள காவல்துறையினரோ அல்லது சுங்கத்துறையினரோ, தமிழக அரசுப் பேருந்தை நிறுத்தாத நிலையில், வனத்துறைக்கு இத்தனை தைரியம் வந்தது எப்படி...?

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறி பெரியாறு அணையின் நீர் தேங்கும் பகுதியான ஆனவச்சாலில், கார் பார்க்கிங் அமைத்த தைரியத்தில், வனத்துறை இந்த வேலையை செய்தது என்றே முடிவுக்கு வருகிறோம்.உச்சநீதிமன்றம் ஆனாலும் சரி, தேசிய மற்றும் தென்னக பசுமை தீர்ப்பாயம் ஆனாலும் சரி... கேரளாவுக்கு எதிராக போடும் உத்தரவுகளை அமல்படுத்துவதில் சுணக்கம் காட்டுவதாலேயே, கேரளாவுக்கு இவ்வளவு தைரியம் வருகிறது. பெரியார் புலிகள் காப்பகம் தமிழகத்தை நம்பி இருக்கும் ஒரு காப்பகம் என்பதை கேரள வனத்துறை மறந்துவிடக்கூடாது.

பெரியார் புலிகள் காப்பக வண்டிகள் தமிழகத்தின் வழியாக வாரத்திற்கு 30 வண்டிகளுக்கு மேல் வந்து செல்லும் நிலையில், எங்களை போராடத் தூண்டாதீர்கள்.பெரியார் புலிகள் காப்பகத்தின் தாண்டிக்குடி சரகத்திற்கு செல்ல, கம்பம், சின்னமனூர், அண்ணா நகர்,கடமலைக்குண்டு, கோரையூத்து தாண்டி மஞ்சனூத்து சோதனை சாவடி வழியாக வெள்ளிமலை வனப்பகுதிக்குள் நுழைந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் வழியாக உங்கள் தாண்டிக்குடி சரகத்திற்கு செல்கிறீர்கள் என்பதை வனத்துறை அதிகாரிகள் மறந்து விட வேண்டாம்.

இன்னொரு மார்க்கத்தில் தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, பேரையூர் திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், சேத்தூர், சிவகிரி, வாசுதேவநல்லூர் வழியாக தலையணைக்கு சென்று அங்கு தமிழக எல்லைக்குள் நீங்கள் கட்டி இருக்கும்,Camp shed க்குச் சென்று விட்டு அங்கு தங்கி, அங்கிருந்து பெரியார் புலிகள் காப்பகத்தின் கிழக்கு டிவிசனுக்கு சென்று வருகிறீர்கள். தமிழகத்தின் தேனி மதுரை விருதுநகர் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களின் வழியாக தங்கு தடையின்றி பெரியார் புலிகள் காப்பக வண்டிகள் பயணிப்பதற்கு நாங்கள் எந்த தடையும் இதுவரை விதித்ததில்லை.

தமிழகச் சாலைகள் இல்லை என்றால், நீங்கள் மேற்கண்ட இரண்டு சரகத்திற்கும் உங்கள் வனத்துறை பணியாளர்களை அனுப்ப முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள். தேவையற்ற நெருக்கடிகளை கொடுத்து இந்த நாட்டின் ஒருமைப்பாட்டை சிதைக்கின்ற உங்களுடைய நடவடிக்கையை நிறுத்திக் கொள்ளுங்கள்.கேரள வனத்துறையால் தான் 42 ஆண்டுகளாக பெரியாறு பிரதான அணியிலிருந்து பேபி அணைக்குச் செல்லும் வழியில் உள்ள 23 மரங்களை வெட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

வல்லக் கடவிலிருந்து பெரியாறு அணைக்கு செல்லும் சாலையில், ஒரு சோதனை சாவடியை அமைத்துக் கொண்டு தமிழக வண்டிகளை அனுமதிக்க தொடர்ந்து மறுப்பதும் நீங்கள்தான்.தேவையற்ற இடர்பாடுகளை தமிழகத்திற்கு எதிராக நிகழ்த்தி. சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம் பெரியார் புலிகள் காப்பக அதிகாரிகள்.இவ்வாறு கூறியுள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News