இரண்டு நாட்களாக மழை இல்லை.. பெரியாறு அணையின் நீர் வரத்தும் சரிவு
முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மழை இல்லாததால், நீர் வரத்து சரிந்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணையில் தென்மேற்கு பருவமழை மிக, மிக குறைவான அளவு பெய்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் முழுக்க மழை இல்லாத நிலையில், ஜூலை மாதம் ஐந்த நாட்கள் மிதமான சாரல் பெய்தது. இந்த சாரல் காரணமாக அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 2500 கனஅடி வரை வந்தது. இதனால் 114 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் 120.05 அடி வரை உயர்ந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் மழை இல்லை. நேற்று தேக்கடியில் 3 மி.மீ., பெரியாறு அணையில் 0.8 மி.மீ., மட்டுமே மழை பதிவானது. இதனால் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 500 கனஅடியாக குறைந்து. அணையில் இருந்து குடிநீருக்காகவும், தேனி மாவட்ட முதல் போக நெல் சாகுபடிக்காகவும், விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மழை குறைவால் வைகை அணைக்கும் விநாடிக்கு 94 கனஅடி மட்டுமே நீர் வருகிறது. மதுரை, ஆண்டிபட்டி- சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்காக அணையில் இருந்து விநாடிக்கு 69 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் மட்டம் 50.13 அடியாக உள்ளது. பலத்த மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், வரும் ஜூன் 17 மற்றும் 18ம் தேதிகளில் பலத்த மழையினை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.