தேனி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பொதுமக்கள் சாலை மறியல்
தேனி மாவட்டத்தில் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.;
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டமும், கேரளாவின் இடுக்கி மாவட்டமும் அருகருகே அமைந்துள்ளன. போடி மெட்டு, கம்பம் மெட்டு, குமுளி மலைப்பாதைகள் வழியாக இரு மாவட்டங்களுக்கும் இடையே போக்குவரத்து நடக்கிறது. அதேபோல் கடத்தலும் தடையின்றி நடக்கிறது. கேரளாவில் விளையும் பொருட்கள் தேனி மாவட்டத்திற்கும், தேனி மாவட்டத்தில் இருந்து முக்கிய பொருட்கள் கேரளாவிற்கும் தடையின்றி கடத்தப்படுகின்றன.
குறிப்பாக தேனி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி இடுக்கி மாவட்டத்தில் கிலோ முப்பது ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் கடத்தல்காரர்கள் ரேஷன் பணியாளர்களை சரி கட்டி, இலவச அரிசியை கிலோ ஐந்து ரூபாய்க்கு விலைக்கு வாங்கி கேரளாவிற்கு கடத்திச் சென்று கிலோ முப்பது ரூபாய்க்கு விற்று கொள்ளை லாபம் அடிக்கின்றனர். நீண்ட காலமாக இந்த பிரச்னை இருந்து வந்தாலும் இதுவரை எந்த அதிகாரியும் இதனை தடுக்க வலுவான நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலான குடும்பங்கள் ரேஷனில் வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசியை நம்பியே வாழ்கின்றனர். ஆனால் இவர்களுக்கு இலவச அரிசி பல ரேஷன் கடைகளில் வழங்கப்படுவதில்லை. இதனால் போடி, கம்பம், பெரியகுளம் பகுதிகளில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை பெரியகுளம் கைலாசபட்டியில் ரேஷன் அரிசியை பணியாளர்கள் கேரளாவிற்கு கடத்தி விட்டதாக புகார் கூறி பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.