பெரியகுளம் மருந்துகடையில் திருடியவர் திருவனந்தபுரத்தில் மாட்டினார்
பெரியகுளம் மருந்துக்கடையில் புகுந்து கொள்ளையடித்த நபரை போலீசார் திருவனந்தபுரத்தில் கைது செய்தனர்;
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மெயின் ரோட்டோரம் உள்ள மருந்துக்கடை ஒன்றில் இரவில் பூட்டை உடைத்து ஒரு லட்சத்து எழுபது ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மருந்துகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. தென்கரை இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர். திருட்டு நடந்த இடத்தில் சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியிலும் இதே பாணியில் ஒரு திருட்டு சம்பவம் நடைபெற்று இருந்தது. இரண்டிலும் திருடியது ஒரே நபர் தான் என முடிவு செய்த போலீசார் திருவனந்தபுரம் போலீசாரோடு இணைந்து குற்றவாளியை தேடினர். திருவனந்தபுரம் சென்ற போலீசார் அங்கு மேமம் என்ற பகுதியில் பதுங்கியிருந்த சாகுல் ஹமீது என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் திருடியதை ஒப்புக்கொண்டார். அவர் திருடிய பணத்தில் ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்தை மீட்டனர். சாகுல்ஹமீது கைது செய்யப்பட்டார்.