சாக்கடையாக மாறிய பெரியகுளம் வராகநதி

வரலாற்று சிறப்பு பெற்ற பெரியகுளம் வராக நதி சாக்கடையாக மாறி விட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்;

Update: 2023-09-16 09:00 GMT

பைல் படம்

வராக நதி பெரியகுளம் நகரை, வடகரை மற்றும் தென்கரை என இரண்டாகப் பிரிக்கிறது. இந்த நதி சோத்துப்பாறையில் இருந்து உபரி நீராக வருகிறது. இங்கு எப்பொழுதும் நீர் வற்றாமல் ஓடிக்கொண்டே இருப்பதால் இதை வற்றாத நதி என்றும் காலப்போக்கில் வராக நதி என்றும் அழைக்கிறார்கள்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி சோத்துப்பாறை அணை கட்டுமானப் பணிகளை பார்வையிட வந்த போது, பெரியகுளத்தின் இயற்கை அழகையும், வராகநதியின் அழகையும் கண்டு தனது வியப்பினை வெளிப்படுத்தினார். இவ்வளவு வளம் மிகுந்த, சுவையான நீர் மிகுந்த வராகநதியை நான் பல முறை கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது நேரில் பார்க்கிறேன் என அப்போது தன்னுடன் இருந்த தி.மு.க., நிர்வாகிகளிடம் பேசி மகிழ்ந்தார். அவ்வளவு சிறப்பும், வரலாற்று பெருமையும், புனிதமும், சுத்தமும், சுவையான நீரும் நிறைந்தது வராகநதி.

காலப்போக்கில் வராக நதியில் கழிவுகள் கலந்தது. பெரியகுளம் நகரின் கழிவுகள் முழுக்க வராக நதியில் கலக்கிறது. இரு கரைகளையும் ஆக்கிரமித்து தென்னை மரங்கள் நட்டும், தோட்டங்கள் அமைத்தும் ஆற்றை குறுக்கி விட்டனர். பெரியகுளம் நகர் பகுதியில் ஆற்றின் கரையினை உள்ளே இழுத்து வீடுகள், வணிக நிறுவனங்கள் கட்டி விட்டனர்.

சாக்கடை நீர், கழிப்பிட நீர் கலந்து வராகநதி தனது அழகையும், பொழிவையும் இழந்து விட்டது. இப்போது வராக சாக்கடை என அழைக்கும் அளவுக்கு நிலைமை மாறி விட்டது. இந்த நீர் பெரியகுளம், அடுத்துள்ள பங்களா பட்டி, வடுகபட்டி, மேல்மங்கலம் , ஜெயமங்கலம், சில்வார்பட்டி, சிந்துவம்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளபுரம், போன்ற ஊர்களில் உள்ள விவசாய நிலங்களுக்கும், பயிர்களுக்கும், விவசாய பாசனத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வராக நதி, இந்த ஊர்களில் வெளியேற்றப்படும் கழிவு நீரால் மேலும் மேலும் மாசடைந்து கழிவு நீர் ஓடையாகவே மாறிவிடுகிறது.

இந்த கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளுக்கு நீர் பாசன வசதியாக இருக்கும் வராக நதி இந்த கிராமங்களில் கொட்டப்படும் குப்பைகளாலும் கழிவு பொருட்களாகவும் நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது. பெரியகுளம் தாலுகாவின் ஜீவ நதியாக ஓடிக் கொண்டிருக்கும் வராக நதியை காப்பது பொதுமக்களின் கடமையாகும்.

எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகள் போதிய கவனம் செலுத்தி வராக நதியை காக்க வேண்டும் என்பதில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்நோக்கி உள்ளனர். தமிழக அரசும் நீர் நிலைகளை பாதுகாக்கும் பொருட்டு வராத நதியின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

Tags:    

Similar News