தேனி மாவட்ட ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளையால் மக்கள் அவதி
தேனியில் இருந்து சென்னை, பெங்களூரு, பாண்டிச்சேரி செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூன்று மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் அனைத்து நகராட்சிகளில் இருந்தும் சென்னைக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சாதாரண நேரங்களில் குறைந்தபட்சம் எண்ணுாறு ரூபாயில் இருந்து மூவாயிரம் ரூபாய் வரை பேருந்துகளின் தரம், வசதிக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
தீபாவளி, பொங்கல் சீசன் நேரங்களில் இந்த கட்டணம் மூன்று மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது. தற்போது சபரிமலை சீசன் என்பதால் வடமாநில, வட மாவட்ட பயணிகள் அதிகம் தேனி மாவட்டம் வழியாக வந்து செல்கின்றனர். இதனால் நீண்டதுார பேருந்துகளில் ஆரம்பநிலை கட்டணமே 2000ம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.
தேனியில் இருந்து சென்னை வரவும், திரும்ப சென்னை செல்லவும் முன்பதிவு செய்தாலும் இதே கட்டணம் கொடுத்தே ஆக வேண்டும்.
தேனி மாவட்டத்தில் இருந்து பல ஆயிரம் பேர் சென்னை, பெங்களூருவு, ஹைதராபாத் மற்றும் வடமாநிலங்களில் உள்ள நகரங்களில் பணிபுரிகின்றனர். இங்கு செல்லும் அத்தனை பேருந்துகளின் கட்டணமும் மூன்று மடங்கிற்கு மேலும் அதிகமாகவே உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண கொள்ளையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகளும் இதனை கண்டுகொள்ளாததால், பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து சம்மந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் செய்தும் எந்த பலனும் இல்லை. அதிகாரிகள் இந்த கட்டண கொள்ளையை கண்டுகொள்வதாகவே இல்லை. இதனால் ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல் பொதுமக்களை மிரட்டியும், நெருக்கடி கொடுத்தும் கூடுதல் கட்டணம் வசூல் செய்கின்றனர்.
அதேபோல் சினிமா தியேட்டர்களிலும் இதே போன்று கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட துறைகளின் அரசு அதிகாரிகள் மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும் புகார் சென்றது. ஆனால் இது குறித்து ஒரு வாரத்திற்கு மேல் சினிமா தியேட்டர்களில் கட்டணக்கொள்ளை தொடர்பான புகார்கள் கொடுத்தும், இதுவரை எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.