தேனியில் மாற்று இடம் கேட்டு கலெக்டர் அலுவலகம் முன் மக்கள் ஆர்ப்பாட்டம்
தேனியில் மதுரை ரோட்டோரம் ஆக்கிரமிப்பில் வசிப்பவர்கள் மாற்று இடம் கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
தேனி- மதுரை ரோட்டில் மேம்பால பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்க இருந்தது. இந்த ரோட்டில் குடியிருப்பவர்கள் தாங்களாக ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ் வழங்கி இருந்தது.
இந்நிலையில் மதுரை ரோட்டோரம் வசிப்பவர்கள் இன்று ஒன்று சேர்ந்து ஊர்வலமாக வந்து கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், 'நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இடத்தில் வீடு கட்டி வசித்து வருகிறோம். இதற்கு முன்னர் இரண்டு முறை ஆக்கிரமிப்பு அகற்ற வந்தனர். நாங்கள் வெளியேறிக்கொள்கிறோம். மாற்று இடம் தாருங்கள் என கேட்டோம். அவர்கள் தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் மாற்று இடம் தரவில்லை. இப்போது திடீரென வந்து காலி செய்ய சொல்கின்றனர். எங்களுக்கு மாற்று இடம் தாருங்கள். வெளியேறிக்கொள்கிறோம் என குறிப்பிட்டு இருந்தனர்.