தேனி மாவட்ட மக்களின் மனமாறுதல் : எந்த கட்சியினரையும் கண்டுகொள்ளவில்லை..!
தேனி மாவட்டத்தில் வீடு, வீடாக ஓட்டுக் கேட்டு வரும் கட்சியினரை பொதுமக்கள் யாரும் பெரிதாக ஒன்றும் கண்டுகொள்ளவில்லை.
தேனி மாவட்டத்தின் பிரசாரக் களத்தில் தி.மு.க., முந்தி நிற்கிறது. அந்த கட்சி வீடு, வீடாகவும் ஓட்டு சேகரிக்கிறது. ஒரிடத்தில் மக்களை ஒருங்கிணைத்து யாராவது ஒரு பேச்சாளரை கூட்டி வந்து ஓட்டு கேட்கிறது. இப்போது அ.தி.மு.க.,வும், அ.ம.மு.க.,வும் மெல்ல களத்திற்கு வந்து இறங்கி உள்ளன.
அ.தி.மு.க., மற்றும் அ.ம.மு.க., சார்பில் வீடு, வீடாக ஓட்டு சேகரிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. ஒன்றிரண்டு நிர்வாகிகள், சில பெண்கள் தலைமையில் வீடு, வீடாக ஒட்டு கேட்டு சிறிய அளவிலான தேர்தல் வாக்குறுதி நோட்டீஸ்களை வழங்கி வருகின்றனர்.
கடந்த உள்ளாட்சி தேர்தல் வரை இப்படி ஒட்டுக் கேட்டு வருபவர்களை மக்கள் வாசலில் வந்து வரவேற்று, சில இடங்களில் நீர் மோர் கொடுத்து, சிரித்த முகத்துடன் அனுப்பி வைக்கும் வழக்கம் இருந்தது. இந்த தேர்தலில் சுத்தமாக அதனை காண முடியவில்லை.
கட்சியினர் ஓட்டுக் கேட்டு வரும் போது, கதவைக்கூட திறப்பதில்லை. கதவை தட்டி உள்ளே சென்று ஒட்டு கேட்க வருபவர்களுக்கும் நேரமில்லை. இதனால் வீடு வீடாக செல்பவர்கள் தங்கள் வேட்பாளர் படம், சின்னம், கட்சி, வாக்குறுதி அச்சிட்ட நோட்டீஸ்களை மட்டும் வீடுகளில் போட்டு விட்டு சென்று விடுகின்றனர்.
ஏதாவது ஒரு வீட்டில் இவர்கள் வரும் போது மக்கள் நின்றிருந்தாலும், அவர்களும் பெரும் வரவேற்பு எதுவும் தருவதில்லை. அவர்கள் தரும் நே நோட்டீசை மட்டும் பெற்றுக் கொள்கின்றனர். இந்த நிலை எல்லாக்கட்சியிலும் உள்ளது. ஒரு கட்சியை வரவேற்று, மற்ற கட்சியை புறக்கணிப்பு என்ற நிலையெல்லாம் இல்லை.
எந்த கட்சிக்கும் வரவேற்பு தரவில்லை. அத்தனை பேரையும் ஒரே மாதிரித்தான் நடத்துகின்றனர். மக்களின் இந்த புறக்கணிப்பு மனநிலையால் ஓட்டு கேட்டு செல்பவர்கள் மனதளவில் மிகவும் சோர்ந்து விடுகின்றனர். அரசியல் கட்சிகளின் மேல் மக்கள் நம்பிக்கையிழந்து வருகின்றனர் என்பதற்கு இதுவே மிகப்பெரிய சாட்சி என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.