தேனி: தேர்தல் வாக்குப்பதிவு போல் களை கட்டிய கொரோனா தடுப்பூசி முகாம்கள்

தேனி அருகே கோடாங்கிபட்டியில் அமைக்கப்பட்டிருந்த மூன்று முகாம்களிலும் காலை 11 மணிக்கே தடுப்பூசிகள் தீர்ந்து போய்விட்டன

Update: 2021-09-12 08:45 GMT

தேனி மாவட்டம், போடி அருகே நாகையகவுண்டன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்களில் ஆர்வமுடன் பங்கேற்ற மக்கள்.

தேனி மாவட்டத்தில்  நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்களில் மக்கள் குவிந்தனர். பல இடங்களில் தேவைக்கு ஏற்ப தடுப்பூசிகள் விநியோகம்  செய்ய முடியாமல் சுகாதாரத்துறை தவித்துப்போனது.

தமிழகம் முழுவதும் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் 450 கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பல இடங்களில், கிராம ஊராட்சி தலைவர்கள் தடுப்பூசி போடுபவர்களுக்கு, குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்படும் என அறிவித்ததுடன், தீவிர  பிரசாரத்திலும் ஈடுபட்டனர்.

இதனால், இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய தடுப்பூசி முகாம்களில் காலை முதலே மக்கள்  குவிந்தனர். தேர்தல் நாளன்று வாக்களிக்க  வருவது போல் கொரோனா தடுப்பூசி முகாம்களுக்கு மக்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்தனர். தேனி அருகே கோடாங்கிபட்டியில் அமைக்கப்பட்டிருந்த மூன்று முகாம்களிலும் காலை 11 மணிக்கே தடுப்பூசிகள் தீர்ந்துபோனது.  மேலும் மக்கள் வந்து கொண்டே இருந்ததால் தேவைக்கு ஏற்ப தடுப்பூசிகளை விநியோகிக்க முடியாமல் சுகாதாரத்துறையினர் திணறினர்.மாவட்டத்தில் பல முகாம்களில் தடுப்பூசிகள் பற்றாக்குறை ஏற்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற இந்த மெகா தடுப்பூசி முகாம்கள் தொடர்பான  செய்திகளை, கேரள ஊடகவியலாளர்கள்   முழுமையாக  சேகரித்தனர்.  இது குறித்து கேரள பத்திரிக்கையாளர்கள் சிலர் கூறுகையில், கேரளாவில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நீடித்துவருவதால், தேவைக்கு ஏற்ப தடுப்பூசி கிடைக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் இது போன்ற மெகா  முகாம்கள் நடத்தி  ஊசி போடும் அளவுக்கு, தடுப்பூசிகள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. தடுப்பூசி போடுவது தொடர்பாக, தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு தங்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியதாகத் தெரிவித்தனர்.

Tags:    

Similar News