கலெக்டர் விருது: 100 சதவீத தடுப்பூசி போட ஆர்வம் காட்டும் ஊராட்சித் தலைவர்கள்
விருது அறிவிக்கப்பட்டதால் ஊராட்சித் தலைவர்கள் களத்தில் இறங்கி மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைத்து வருகின்றனர்
தேனி கலெக்டர் முரளீதரனிடம் விருது வாங்க வேண்டும் என்ற முனைப்புடன் கிராம ஊராட்சி தலைவர்கள் செயல்படுவதால், பெரும்பாலான ஊராட்சிகளில் தடுப்பூசி போட மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
தேனி மாவட்டத்தில் 100 சதவீதம் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் தலைவர்களை பாராட்டி விருது வழங்கப்படும். இந்த பாராட்டு விழா அந்த கிராமத்திலேயே நடைபெறும் என கலெக்டர் முரளீதரன் அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு ஊராட்சித் தலைவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை போதிய அக்கறையின்றி தடுப்பூசி முகாம்களை நடத்திய தலைவர்கள், தற்போது அவர்களே களத்தில் இறங்கி, மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைத்து வருகின்றனர். இதனால் கிராமங்களில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களில், கூட்டம் அலைமோதுகிறது. இதே வேகத்தில் தடுப்பூசி போட்டால், தேனி மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் ஓரிரு மாதங்களுக்குள் 100 சதவீதம் இலக்கினை எட்டி விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.