நிரம்பி வழியும் மீறுசமுத்திரம்: நிலத்தடி நீர் மட்டம் உயர்வு
தேனி மீறுசமுத்திரம் கண்மாய் 3 மாதங்களுக்கும் மேலாக நிரம்பி வழிகிறது.
தேனி மீறுசமுத்திரம் கண்மாய் மிகப்பெரிய பரப்பளவு கொண்டது. இந்த கண்மாயில் தேங்கும் நீரில் முன்பு பலநுாறு ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. ஆனால் தற்போது இந்த கண்மாய் நீர் மூலம் பாசன வசதி பெற்ற நிலங்கள் முழுக்க வீடுகளாகி விட்டன.
வீரப்ப அய்யனார் கோயில் மலையில் பெய்யும் மழைநீர் முழுக்க இக்கண்மாய்க்கு வரும். கண்மாய் மறுகால் பாய்ந்தால் வாய்க்கால் வழியாக கொட்டகுடி ஆற்றுக்கு சென்று, அங்கிருந்து வைகை அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இருப்பினும் தேனி நகரின் நீர்வள ஆதாரமாக இருப்பதால் பொதுப்பணித்துறையினர்
இக்கண்மாயில் முழுக்க நீர் தேக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த அக்டோபர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையின் போதே, மீறுசமுத்திரம் கண்மாய் நிரம்பி விட்டது. தொடர்ச்சியாக மழை கிடைப்பதால், மூன்று மாதங்களாக கண்மாய் நிறைந்து மறுகால் பாய்கிறது. தவிர கண்மாய் நிரம்பி வழிவதால் தேனி நகர் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் சிறப்பான நிலையில் உயர்ந்துள்ளது.