அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் ஓ.பி.எஸ்.சை மட்டும் சந்திக்கலாமா?
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் ஓ.பி.எஸ்.சை மட்டும் சந்திக்கலாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.;
தேனி மாவட்டத்தில் இருந்து ஓ.பி.எஸ். தம்பி ராஜா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன் உட்பட அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் சசிகலாவை சந்தித்து அ.தி.மு.க.,விற்கு தலைமை ஏற்க வேண்டும் என கூறினர். இதனை அறிந்த அ.தி.மு.க., மேலிடம் இவர்களை அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கியதாக அறிவித்தது. இந்நிலையில் அ.தி.மு.க.,வில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் என்றே சசிகலாவும் அறிக்கைகள் விடுத்து வருகிறார். தற்போது தேனி மாவட்டத்தில் நீக்கப்பட்ட அ.தி.மு.க.,வினர் அத்தனை பேரும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.,க்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவரது வீட்டிற்கு தினமும் சென்று வருபவர்கள். ராஜா எப்போதும் அண்ணன் வீட்டில் தான் இருப்பார். ஆனால் மற்றவர்கள் தினமும் சென்று தங்கி உணவருந்தி வரும் அளவுக்கு நெருக்கம் மிகுந்தவர்கள்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும், அதற்கான வருத்தம் நீக்கப்பட்ட யாரிடமும் துளி அளவும் இல்லை. முன்பை விட தற்போது சற்று உற்சாகத்துடன் தான் வலம் வருகின்றனர். வழக்கம் போல் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., வீட்டிற்கு சென்று வருகின்றனர். கட்சியின் சக நிர்வாகிகளுடன் வழக்கம் போல் ஆலோசனை செய்வது, கட்சி வேலைகள் செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். அவர்களது இயல்பான எந்த நடவடிக்கைகளிலும் மாற்றம் இல்லை. இது குறித்து அவர்களிடம் கேட்ட போது, 'கட்சி எங்கள எப்பங்க நீக்கிச்சு'. நாங்க எப்போதுமே எங்க அண்ணன் (ஓ.பி.எஸ்.,) வீ ட்டிற்கு செல்வது வழக்கம். அது போல் தற்போதும் சென்று வருகிறோம் என்றனர்.
கட்சியில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட சசிகலாவை சந்தித்தார்கள் என்ற காரணத்திற்காக தான் ஓ.பி.எஸ். தம்பி ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த நிலையில் அவர்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரை மட்டும் சந்திப்பது எந்த வகையில் நியாயம்? என்ற கேள்வி எழுந்துள்ளது.