தேனியில் இருந்து சபரிமலைக்கு ஒரு வழிப்பாதை அமல்
தேனி மாவட்டத்தின் வழியாக சபரிமலை செல்வதற்கு ஒருவழிப்பாதை அமல்படுத்தப் பட்டுள்ளது
தேனி மாவட்டத்தின் வழியாக சபரிமலை ஐயப்பசுவாமி திருக்கோவில் தரிசனத்திற்கு, ஆண்டுதோறும் கார்த்திகை முதல் தேதியிலிருந்து, தை மாதம் நடைபெறும் மகரஜோதி வரை, தமிழகத்தின் தென்பகுதியிலிருந்து பல லட்சம் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருவார்கள் வழக்கமாக முந்தைய ஆண்டுகளில் மகரஜோதி தரிசனம் நெருங்கும் சமயத்தில் மட்டும் ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டு பக்தர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், பக்தர்களின் பாதுகாப்பான பயணத்தை கருத்தில் கொண்டும் போக்குவரத்து இடையூறில்லாமல் சென்று வருவதற்கும் 20.11.2023 ஆம் தேதி முதல் ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டுள்ளது. தேனியில் இருந்து சபரிமலை செல்பவர்கள் கம்பம் மெட்டு வழியாக சபரிமலை செல்ல வேண்டும். தரிசனம் முடித்து திரும்புபவர்கள் குமுளி வழியாக சொந்த ஊர் திரும்புவதற்கான ஒரு வழித்தடமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதற்கு கம்பம் மெட்டு வழித்தடத்தையும், திரும்புவதற்கு குமுளி வழித்தடத்தையும் பயன்படுத்தி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.