சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியை வறியவர்களுக்கு வாரி வழங்கும் விவசாயி..!

தேனி உழவர்சந்தை விவசாயி பாலகுரு, காய்கறிகள் விற்பனை மூலம் வரும் வருவாயில் தினமும் ஒரு பகுதியை தானம் செய்கிறார்.

Update: 2023-11-29 15:09 GMT

தேனி உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்யும் விவசாயி.

‛தேனி உழவர்சந்தையில் காய்கறிகள் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை 15 ஆண்டுகளாக வறியவர்களுக்கும், கோயில்களுக்கும், பள்ளி சத்துணவு மையங்களுக்கும் தானமாக வழங்கி வருகிறார் விவசாயி பாலகுரு. ‛அரசு இலவசமாக கடை கொடுத்துள்ளது.

உழவர்சந்தையில் காய்கறி விற்பதால் யாருக்கும் கமிஷன் கொடுக்க வேண்டிய அவசியமில்லை’. இதனால் எனக்கு கிடைக்கும் லாபத்தில் ஒரு சிறிய பகுதியை அறப்பணிகளுக்கு வழங்கி வருகிறேன்’என்று தன்னடக்கத்துடன் பாலகுரு தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்த தேனி உழவர்சந்தை தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் சந்தைகளின் பட்டியலில் முதல் தரவரிசையில் இடம் பெற்றுள்ளது. இங்கு தினமும் பல ஆயிரம் பேர் காய்கறிகள் வாங்க வருகின்றனர். வருபவர்களில் பெரும்பாலானோர் இங்கு கடை வைத்துள்ள பாலகுருவிடம் காய்கறிகள் வாங்காமல் செல்வதில்லை.

18 ஆண்டுகளுக்கு முன் இவர் சந்தைக்கு காய்கறி விற்க வரும் போது மிகவும் சாதாரணமான ஒரு விவசாய கூலி தொழிலாளியாக இருந்தார். தேனி அல்லிநகரத்தில் மிகவும் சிறிய மழை பெய்தால் ஒழுகும் வீட்டில் வறுமையான சூழலில் வசித்து வந்தார். வறுமையில் வாடிய இவர், உழவர்சந்தையில் கடை வைக்க வேண்டும் என்பதற்காக வீரப்ப அய்யனார் கோயில் மலையடிவாரத்தில் ஒரு சிறிய நிலத்தை குத்தகைக்கு பிடித்து விவசாயம் செய்தார். விவசாயம் தொடங்கும் போதே, ‛முழுக்க இயற்கையான முறையில் மட்டுமே சாகுபடி செய்ய வேண்டும்’ என்பதில் தெளிவாக இருந்தார்.

மலையடிவாரத்தில் இருந்த நிலம் என்பதால் விளைச்சல் சிறப்பாக இருந்தது. சிறிய அளவில் கீரை, கருவேப்பிலை, புதினா, மல்லி மட்டுமே விவசாயம் செய்தார். இவரது குடும்பத்தினர் மட்டுமே வேலை செய்தனர். இங்கு அறுவடையான கீரை, கருவேப்பிலை, மல்லி, புதினாவை உழவர்சந்தையில் வியாபாரம் செய்தார். சந்தை வியாபாரிகள் நிர்ணயிக்கும் விலைக்கு மட்டுமே விற்பனை செய்வார். தவிர ரெகுலர் வாடிக்கையாளர்களிடம் கணக்கு பார்க்காமல் அள்ளிக் கொடுத்தார்.

இதனால் வாடிக்கையாளர்கள் குவிந்தனர். வியாபாரம் பெருகியது. தினமும் வியாபாரத்தில் கிடைக்கும் வருவாயில் 20 சதவீதத்தையாவது ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என தனது மனதிற்குள் முடிவெடுத்தார். தேனியில் உள்ள ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளி இல்லங்களுக்கு தேவையான பொருட்களை இலவசமாகவே வழங்கினார். கோயில்களுக்கு கேட்டு வந்தால் தாராளமாக அள்ளிக் கொடுத்தார். பல ஏழை பெண்களின் திருமணத்திற்கும் உதவிகள் செய்துள்ளார். ஒருநாள், இருநாள் அல்ல தொடர்ந்து 18 ஆண்டுகளாக இந்த சேவையினை செய்து வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளி சத்துணவு மையங்களில் கலவை சாதம் வழங்கப்பட்டது. இதற்காக கீரை, மல்லி, புதினா வாங்க வரும் சத்துணவு அமைப்பாளர்களுக்கும் ‛குழந்தைகளுக்கு நல்லா சமைச்சு கொடுங்கன்னு’ அள்ளி வழங்கினார். இவ்வளவு கொடுத்தாலும் இவரது வருவாய் உயர்ந்து கொண்டே வந்ததே தவிர குறையவில்லை. சிறிய அளவில் குத்தகைக்கு நிலம் பிடித்து விவசாயம் செய்த இவர், தற்போது பல ஏக்கர்களுக்கு சொந்தக்காரர்.

மிகப்பெரிய விவசாயியாக  மாறிய இவர், தென்னை, மா, வாழை, இஞ்சி, கீரை, மல்லி, புதினா, வெண்டைக்காய் என பல்வேறு காய்கறிகளை சாகுபடி செய்து விற்பனை செய்கிறார். சந்தையில் கடை தொடங்கியது முதல் தற்போது வரை இவ்வளவு கடுமையாக உழைத்து தான, தர்மங்கள் செய்யும் பாலகுரு, தினமும் இருவேளை மட்டுமே சாப்பிடுகிறார். இது பற்றி கேட்டால், ‛சாப்பிடக்கூட நேரமில்லை, இருவேளை சாப்பாடே பழகி விட்டது’ என்கிறார்.

தொடர்ந்து 18 ஆண்டுகளாக இப்படி தான தர்மங்களை எப்படி உங்களால் செய்ய முடிகிறது என கேள்வி எழுப்பினால், ‛உழவர்சந்தையில் இலவசமாக கடை கொடுத்துள்ளனர். வாடகை பணம் மிச்சம். விளை பொருட்களை நேரடியாக விற்பதால் கமிஷன் வியாபாரிகளுக்கு எந்த கமிஷனும் நான் தர வேண்டிய நிலை இல்லை’.

பூமித்தாய் எனக்கு விளைச்சலை தருகிறார். அரசு விற்பனை வசதி தருகிறது. இதனால் கிடைக்கும் வருவாயில் ஒரு சிறு பகுதியை மட்டுமே தானமாக செய்கிறேன். தற்போது கோயில் அன்னதானத்திற்கு என்னை தேடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இருந்தாலும், இறைவன் எனக்கு கொடுத்ததை தானே நான் திரும்ப கொடுக்கிறேன். நான் மட்டுமல்ல சந்தையில் காய்கறி விற்பனை செய்யும் பலரும் என்னைப்போன்றே வறியவர்களுக்கும் தர்ம காரியங்களுக்கும் உதவுகின்றனர்’ என தன்னடக்கத்துடன் சொல்கிறார்.

Tags:    

Similar News