கட்டுப்பாட்டில் ஒமிக்ரான் பரவல்: தேனி மாவட்ட சுகாதாரத்துறை தகவல்
தேனி மாவட்டத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் கட்டுக்குள் இருந்தாலும், இந்த வாரம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனி மாவட்டத்தில், கடந்த டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் முதல் ஒமிக்ரான் தொற்று பதிவானது. அதன் பின்னர் யாருக்கும் ஒமிக்ரான் பரிசோதனை செய்யப்படவில்லை. ஒமிக்ரான் பாதித்தவர்களையும் கொரோனா தொற்று எனவே மதிப்பிட்டு வருகின்றனர். மாவட்டத்தில் தொற்று கண்டறியப்பட்டு 22 நாட்களை கடந்த நிலையிலும் இன்று வரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2000ஐ எட்டவில்லை. ஒமிக்ரான் பற்றிய தகவல்கள் வெளியானதுபோது, அதன் பரவல் வேகத்தினை மதிப்பிடும் போதும், தற்போதைய நடப்பு காலகட்டத்தில் தேனி மாவட்டத்தில் குறைந்தது 15 ஆயிரம் பேராவது பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் பாதிப்பு இன்னும் 2000ஐ எட்டாத நிலையில், (இன்றைய பாதிப்பு 374) தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 13 மட்டுமே. ஆனால் மாவட்டத்தில் பரவலாக சளி, காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. ஒரே நாளில்இந்த பாதிப்பு சரியாகி மறுநாள் இயல்புக்கு வந்து விடுகின்றனர். தொற்று பாதித்தவர்களில் மிக, மிக குறைந்த எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு மட்டுமே ஆன்டிபயாடிக் மருந்துகள் தேவைப்படுகின்றன. அதனை கொடுத்து விட்டால் அவர்களும் குணமடைந்து விடுகின்றனர். பாதிக்கப்படுபவர்களில் மிகப்பெரும்பாலானோர் தடுப்பூசி போடாதவர்கள். இவர்களும் விரைவில் குணமடைந்து விடுகின்றனர்.
இருப்பினும், இன்னும் ஒரு வாரத்தில் ஒமிக்ரான் உச்சத்தை எட்டும் வாய்ப்புகள் உள்ளன. அப்போது கூட, மாவட்டத்தில் தினசரி பாதிப்பு ஆயிரத்தை கடக்காது என நம்பப்படுகிறது. காரணம் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது. குழந்தைகளுக்கு ஒமிக்ரான் வந்து செல்வதே தெரியவில்லை. சுகாதாரத்துறை முழுவீச்சில் செயல்பட்டதால் தேனி மாவட்டம் பாதுகாப்பு வளையத்தில் தான் உள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.