குரங்கணி மலைக்கு சினிமா கனரக வாகனம் செல்ல அனுமதி அளித்தது யார்?
போடி வனச்சரகராக இருக்கும் நாகராஜ், வனச்சட்டங்களுக்கு எதிராக செய்யும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு கொண்டு இருக்கிறோம்.
போடி வனச்சரகராக இருக்கும் நாகராஜ், வனச்சட்டங்களுக்கு எதிராக செய்து வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு கொண்டு இருக்கிறோம். ஆனால் அதை கேட்டு மேல்நடவடிக்கை எடுப்பதற்கு யாருமில்லை என்பதுதான் வேதனையானது.
குரங்கணி வனத்துறை சோதனைச் சாவடியை தாண்டி கனரக வண்டிகள் செல்வதற்கு அனுமதி இல்லை. ஜீப்புகள் மட்டுமே சோதனைச் சாவடியைத் தாண்டி விவசாய பயன்பாடுகளுக்காக அனுமதிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், அதைத் தாண்டி எந்தவித நான்கு சக்கர வாகனங்களுக்கும் மேலே அனுமதி இல்லை.
இது தேனி மாவட்ட வனத்துறை விதித்திருக்கும் சுயசார்பு முடிவு மட்டுமே. குரங்கணி தீ விபத்திற்கு பின்னால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக வனத்துறையால் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கவே செய்கிறோம்.
ஆனால், சினிமா படப்பிடிப்புகளுக்கு மட்டும் இந்தச் சட்டங்களில் இருந்து விதிவிலக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. குரங்கணிக்கு மேலே பட்டாக்காடுகளில் விவசாயம் செய்து வரும் ஒரு விவசாயி, ஜீப்புகளைத் தாண்டி ஒரு டிராக்டரை கூட எடுத்துச் செல்ல முடியாத நிலையில், ஜீப்புகளைத் தாண்டி கனரக சினிமா படப்பிடிப்பு வண்டிகளுக்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கப்பட்டது? இந்த அனுமதியை வழங்கியது யார்...?
விவசாயிக்கு ஒரு சட்டம் சினிமாக்காரனுக்கு ஒரு சட்டமா என்கிற கேள்வி எழுகிறது...? தனக்குப் பிடிக்கா விட்டால் ஒரு விவசாயியை விரட்டி விரட்டி பிடித்துக் கொண்டு வந்து அபராதம் விதிப்பதும், தனக்குப் பிடித்தால் சினிமா வண்டிகளுக்கு விதிவிலக்கு கொடுத்து மேலே அனுப்புவதுமாக இருப்பது எந்த வகையான ஜனநாயக நடைமுறை...!
போடி மெட்டில் சூழலியலுக்கு எதிராக பாறைகளை ராட்சத வண்டிகளைக் கொண்டு உடைத்த போதே நாகராஜ் மீது வழக்கு பாய்ந்திருக்க வேண்டும். நாங்களும் அவர் ஒரு அரசு ஊழியர். போகப் போக தன்னை மாற்றிக் கொண்டு விடுவார் என்றுதான் எதிர்பார்க்கிறோம். ஆனால் இயல்பான புறச் சூழல்களுக்கு எதிராக அவர் தொடர்ந்து செயல்பட்டு வருவதை பார்த்தால், நாகராஜ், யாரிடம் சம்பளம் பெறும் அதிகாரி என்கிற கேள்வி எழுகிறது.
வரும் வெள்ளிக்கிழமை, பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கமும் இணைந்து நடத்தும் தேனி மாவட்ட வனத்துறை அலுவலக முற்றுகையில், நாகராஜ் ஒரு கருப்பொருளாக இருப்பார் என்பதை இதன் மூலமாக தெரிவித்துக் கொள்கிறோம்.
குரங்கணி வனத்துறை சோதனை சாவடிக்கு மேலே சினிமா வண்டிகளை அனுமதித்ததற்காக நாகராஜை உயர் அதிகாரிகள் கேள்வி கேட்பார்களா..? மாவட்ட வன உயர் அதிகாரிகள் கேள்வி கேட்காவிட்டாலும், வரும் வெள்ளிக்கிழமை முற்றுகையில் நாங்கள் கேட்போம்.
வனத்தைப் போற்றி பாதுகாக்க வேண்டிய வன அதிகாரியே, வனச் சட்டங்களை மீறுவது நியாயமா என்பதை பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கேட்கப்படும்.