பழைய வாகனங்கள் விற்பனை : புதிய நடைமுறை வேண்டாம்..!
வாகனங்களை விற்பனை செய்யும் போது புதிய நடைமுறையினை மாற்ற வேண்டும் என வாகன ஆலோசகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர்கள் நலச்சங்கம் சார்பில் தேனி கலெக்டர் ஷஜீவனா, மற்றும் எஸ்.பி., யிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: நாங்கள் தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் முறையாக பதிவு பெற்ற சங்கத்தை நடத்தி வருகிறோம். சங்க உறுப்பினர்கள் அனைவரும் பழைய இரு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள், பஸ், லாரி, மினிவேன் உட்பட வாகனங்களை வாங்கி, விற்பனை செய்து வருகிறோம்.
இத்தொழிலை நம்பி பல ஆயிரம் பேர் வாழ்க்கை நடத்தி வருகிறேன். அப்படி வாங்கி விற்கும் போது, பெயர் மாற்றம் செய்ய ஹைச்பி கிளியரென்ஸ், ஹைச்பி எண்டாஸ்மெண்ட், எப்சி, சிசி பெர்மிட் ரெனிவல், சரண்டர் போன்ற அரசு பணிகளுக்கு முறையான கட்டணத்தை செலுத்தி, ஆவணங்களை முறையாக பெயர் மாற்றம் செய்து வருகிறோம்.
அப்படி பெயர் மாற்றத்திற்காக வாகனங்களை காட்டி, ஆவணங்களை கொடுக்கும் போது, அதிகாரிகள் அதனை பதிந்த பின்னர் திரும்ப எங்களிடம் வழங்காமல், தபால் மூலம் வாகன உரிமையாளருக்கு அனுப்பி வருகின்றனர். இந்த நடைமுறை எங்களின் வியாபாரத்திற்கு பெரிய சிக்கல் ஏற்படுத்துகிறது. வாகன உரிமையாளர்கள் கடன் பெற்ற பின்னர், கடனை திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலையில் வாகனங்களை எங்களிடம் ஒப்படைக்கின்றனர்.
வாகன விற்பனை ஆலோசகர்கள் வழியாக இந்த வாகனங்களை விற்பனை செய்யும் போது, பழைய ஓனர் முகவரி, ஆதார் நம்பர் கேட்கின்றனர். மொபைல் நம்பர் கேட்கின்றனர். பலரும் மொபைல் நம்பரை மாற்றி வருகின்றனர். வாகனம் வாங்கும் போது இருக்கும் மொபைல் நம்பரை பலரும் விற்கும் போது மாற்றி விடுகின்றனர்.
இது போன்ற சிக்கல்களை தீர்க்க முன்பு போல், பழைய நடைமுறையினை பின்பற்ற வேண்டும். வாகனச்சான்று, எப்சி முடிவடைந்த வாகனங்கள், பெயர் மாற்றம் செய்யும் போது, பெயர் மாற்றம் செய்யும் ஊரிலேயே எப்சி காண்பிக்கும் பழைய நடைமுறையினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
தற்போது விதிகளை மீறும் வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது. இப்படி அபராதம் விதிப்பது வாகனங்களை பயன்படுத்துபவர்களுக்கு தெரியவில்லை. விற்பனை செய்யும் போது இந்த அபராத தொகை விதித்திருப்பது தெரியவருகிறது. இதனால் எங்களுக்கு தேவையற்ற சிக்கல்கள் உருவாகிறது. எனவே விதிமீறும் வாகனங்களுக்கு அவ்வப்போது அபராதம் வசூலிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.