தேனி- கேரளா இடையே இரவு நேர போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்

தேனி மாவட்டத்தில் மழை தொடர்வதால் தேனி- கேரளா இடையே இரவு நேர போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-12-10 05:31 GMT

பைல் படம்.

மாண்டஸ் புயலின் தாக்கம் தேனி மாவட்டத்தில் நேற்று முழுக்க மழை பெய்தது. பலத்த மழை இல்லாவிட்டாலும், கொடைக்கானல், ஊட்டி போன்ற பருவநிலை நிலவியது. மிகவும் இருண்ட வானிலை, குளிர்ந்த சாற்று, இடைவிடாத சாரல், அவ்வப்போது சீறும் மழை என தேனி மாவட்டத்தின் சீதோஷ்ண நிலை மிகவும் சிறப்பாக இருக்கிறது.

இதற்கிடையில் கம்பம், உத்தமபாளையம், குமுளி ரோடுகளில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தின. மழை தொடர்வதாலும், பருவநிலை மிகவும் சாதகமாக உள்ளதாலும், மழை இன்னும் இரண்டு நாட்களுக்கும் மேல் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதாலும், மாவட்ட நிர்வாகம் பல்வேறு உஷார் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

குறிப்பாக குமுளி ரோடு, கம்பம் மெட்டு ரோடு, போடி மெட்டு ரோடுகள் தான் தேனி மாவட்டத்தையும், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தையும் இணைக்கின்றன. இந்த ரோடுகளில் பாறைகள் சரியவும், மரங்கள் சாயவும் வாய்ப்புகள் இருப்பதால், இரவு நேர போக்குவரத்தை மட்டும் நிறுத்தி வைக்க வேண்டும் என போக்குவரத்து நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அதற்கேற்ற பயண திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும் என்றும், பகல் நேரங்களில் எந்த பிரச்னையும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் இந்த ரோடுகள் மட்டுமின்றி மாவட்டத்தில் எந்த ரோடுகளிலும் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டாலும் உடனே சீர் செய்ய தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கி உள்ளதாக போலீஸ் நிர்வாகம், தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.மழையால் ஆறுகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே சுருளிஅருவி, கும்பக்கரை அருவி, சின்னசுருளிஅருவி, அணைக்கரைப்பட்டி அருவிகளில் யாரும் குளிக்க வர வேண்டாம். ஆறுகள், குளங்கள், கண்மாய்களில் இறங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடனே மீட்பு பணிகளில் ஈடுபட வசதியாக போலீஸ் நிர்வாகம், தீயணைப்புத்துறை, பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். தண்ணீர் சூழும் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இதற்கிடையில் மழை வெள்ளத்தால் ரோடுகளில் தண்ணீர்  அதிகம் காணப்படுகிறது. சில இடங்களில் மண், சேறு, சகதி படிந்துள்ளது. வேகமாக செல்லும் வாகனங்கள் இந்த இடத்தினை கடக்கும் போது, கட்டுப்பாட்டினை இழந்து விபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே பல சிறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே சேறு, சகதி ரோட்டில் படிந்துள்ள இடத்தை வாகனங்கள் மிகவும் கவனமுடன் கடக்க வேண்டும். வாகனங்களை வேகமாக ஓட்ட வேண்டாம். மிகவும் கட்டுப்பாட்டுடன் வாகனங்களை இயக்குங்கள் என தேனி மாவட்ட போக்குவரத்து போலீசாரும் அறிவுறுத்தி உள்ளனர். ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டு வேகமாக செல்லும் வாகனங்களை எச்சரித்து அனுப்பி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News