பெரியாறு அணை போராட்டக்களத்தில் இறங்கிய தமிழக நிருபர்கள்..!
பெரியாறு அணை போராட்டக்களத்தில் நேரடியாக தேனி மாவட்டத்தை சேர்ந்த நிருபர்களும் இறங்கி விட்டனர்.
பெரியாறு அணையினை இடித்து விட்டு புதிய அணை கட்ட கேரள அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது மத்திய அரசிடம் வரைவு அறிக்கை அனுப்பி அனுமதி கேட்டு வருகிறது. இந்நிலையில் கேரள அரசின் போக்கினை கண்டித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் இன்று குமுளியை முற்றுகையிட உள்ளனர். இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், விவசாயிகள் தேனி வந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் தற்போது 450க்கும் மேற்பட்ட நிருபர்கள் உள்ளனர். இவர்கள் சோசியல் மீடியா, டிஜிட்டல் மீடியா, விஷூவல் மீடியா, பிரிண்டிங் மீடியா, வார இதழ்கள், மாத இதழ்கள் என பல்வேறு தளங்களில் பணிபுரிகின்றனர். பெரியாறு அணை விஷயத்தில் அத்தனை பேரும் ஒருமித்த கருத்துடன் இருப்பது மிகவும் சிறப்புக்குரிய விஷயம்.
பெரியாறு அணை பற்றி தேனி மாவட்டத்தில் உள்ள அத்தனை நிருபர்களும் துல்லியமாக அறிந்து வைத்துள்ளனர். இதனால் அணை சம்மந்தப்பட்ட செய்திகளை தவறாமல் தங்கள் தளங்களில் வெளியிட்டு வந்தனர். பெரியாறு அணை விஷயத்தில் எந்த நிலையிலும் தேனி மாவட்ட நிருபர்கள் தங்கள் மாநில நலன்களை பாதுகாப்பதில் மிக உறுதியுடனும், தீவிரத்துடனும் செயல்பட்டு வருகின்றனர். இதற்காக பல்வேறு சங்கடங்களையும் அனுபவித்து வருகின்றனர். இருப்பினும் ஒரு துளி கூட பின்வாங்கவில்லை.
இந்நிலையில் இன்று நடக்கும் குமுளி முற்றுகை போராட்டத்தில் செய்தி சேகரிக்க குவிவார்கள் என்று மட்டும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விவசாயிகளுடன் சேர்ந்து போராட்டக்களத்தில் இறங்குவதாக தேனி டிஸ்ட்ரிக் பிரஸ் கிளப் வெளிப்படையாக அறிவித்துள்ளது. செயல்தலைவர் சிவா ஆண்டவர் செல்வக்குமார், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் மாணிக்கவாசகம் ஆகியோர் பெயர் அச்சிட்ட சங்கத்தின் லெட்டர் பேடில் நிர்வாகக்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பகிரங்கமாக விவசாயிகள் போராட்டத்திற்கான ஆதரவையும், அவர்களுக்கு துணையாக களம் இறங்குவதற்கான உறுதிமொழியினையும் வெளியிட்டுள்ளனர்.
அடுத்து தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கமும் இதே அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. சங்க தேனி மாவட்ட தலைவர் டி.முத்துக்காமாட்சி, விவசாயிகளுக்கு ஆதரவாக எங்கள் சங்கம் போராட்டக்களத்தில் இறங்கும். அணை பிரச்னை குறித்தும் தமிழகத்தின் உரிமை குறித்தும், நாம் இழந்த விஷயங்கள் பற்றியும், தற்போது உள்ள சூழல் பற்றியும் முழுமையாக வெளிப்படையாக மக்களுக்கு தெரியப்படுத்துவோம். விவசாயிகளுடன் களத்தில் இறங்கி தமிழகத்தின் உரிமை காக்க போராடுவோம் என அறிவித்துள்ளார்.
கம்பம் ஜெர்னலிஸ் அசோசியேசனும், (தமிழ்நாடு ஜர்னலிஸ்ட் சோசியல் வெல்பர் டெவலப்மெண்ட் டிரஸ்ட்) தங்கள் முழு ஆதரவை தெரிவித்துள்ளது. இச்சங்க பொருளாளர் சையதுசுல்தான் இப்ராகிம், ‘முல்லைப்பெரியாறு பிரச்னையில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் முழு உண்மைகள் மக்களுக்குத் தெரியவில்லை. இதனால் தமிழகத்திற்கு பல இழப்புகள் ஏற்பட்டு விட்டன. இப்போதுள்ள நிலையினை அத்தனை நிருபர்களும் துல்லியமாக தெரிந்து வைத்துள்ளனர். மக்களுக்கும் உடனுக்குடன் தெரியப்படுத்தி வருகின்றனர். எனவே நாங்கள் வெளிப்படைத்தன்மையுடன் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு, அவர்களுடன் போராட்டக்களத்திலும் இறங்குவோம் என அறிவித்துள்ளார்.
கம்பம் பள்ளத்தாக்கு பத்திரிக்கையாளர் சங்கமும் விவசாயிகள் போராட்டத்திற்கு முழு ஆதரவை வழங்கி உள்ளது. ஏற்கனவே கேரள அரசு தேனி மாவட்ட நிருபர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளது. அதனால் பத்திரிக்கையாளர்கள் பலர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். ஆனாலும் எது பற்றியும் கவலையில்லாமல் தேனி மாவட்ட நிருபர் சங்கங்கள் போராட்ட களத்தில் குதித்துள்ளன.
இதுவரை இந்தியா அளவில் நிருபர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தருவார்கள். செய்தி வெளியிடுவார்கள். முதன் முறையாக தேனி மாவட்ட நிருபர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தருவதோடு மட்டுமின்றி, தமிழக நலனுக்காக போராடும் விவசாயிகளுடன் இணைந்து களத்தில் இறங்குவதாக அறிவித்துள்ளனர். அடுத்தடுத்த நிருபர்கள் சங்கங்களின் அறிவிப்பு மாவட்டத்தின் அனல் கிளப்பி வருகிறது. புதிதாக கிளம்பி உள்ள நிருபர்கள் பிரச்னை போலீசாருக்கும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.