தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் பார்களாக மாறிய சாலைகள்
தேனி மாவட்டத்தில் ஆள் நடமாட்டம் குறைந்த பல நுாறுக்கும் மேற்பட்ட சாலைகள் டாஸ்மாக் பார்களாக மாறியுள்ளன
தேனி மாவட்டத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட தெருக்கள் திறந்தவெளி மதுபார்களாக மாறியுள்ளன. இந்த சாலைகளில் நடக்க முடியாமல் பெண்கள், பொதுமக்கள் மிகவும் தவிக்கின்றனர். வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
தேனியில் நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் மட்டும் 850க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. புதிதாக உருவான குடியிருப்புகளில் நகராட்சி வசம் ஒப்படைக்கப்படாத தெருக்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டும். மொத்தம் நகராட்சியில் பல நுாறு தெருக்கள் அகலமாக இருள்சூழ்ந்து காணப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் இது போன்ற தெருக்களின் எண்ணிக்கை பல நுாறினை தாண்டும். குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளில் சரக்குகளை வாங்கிக் கொண்டு, சாலையோர வியாபாரிகளிடம் தேவையான ஸ்நாக்ஸ்களை வாங்கிக் கொண்டு இந்த சாலைகளில் வந்து அமர்ந்து கொள்கின்றனர். தேனி உழவர்சந்தை அருகே உள்ள தெரு உட்பட ஒரு சில தெருக்களில் காலை 11 மணிக்கு குடிமகன்கள் குவிந்து விடுகின்றனர். இந்த தெருக்களை பொதுமக்கள் எப்போதுமே பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இதனை விட பெரிய பிரச்னையாக தற்போது உருவெடுத்திருப்பது, பார்களாக மாறும் ரோடுகள். பரபரப்பான மக்கள் நடமாட்டம் இல்லாத மற்றும் தெருவிளக்குகள் பற்றாக்குறையாக உள்ள 500க்கும் மேற்பட்ட சாலைகளை குடிமகன்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். மாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை இத்தெருக்களில் யாரும் நடமாட முடியவில்லை. குறிப்பாக வலுவான ஆண் துணையின்றி பெண்கள் நடக்கவே முடியாது.
இந்த பகுதிகளில் உள்ள கோயில்கள் குடியிருப்புகளுக்கு கூட செல்ல முடியாது. தவிர இப்பகுதியில் உள்ள சிறிய பலசரக்கு கடைகள், பெட்டிக்கடைகளுக்கு இவர்கள் விநோத உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதாவது குடிக்க தங்களுக்கு தேவையான வாட்டர் பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர், சிகரெட், ஊறுகாய், புகையிலை பொருட்களை விற்க வேண்டும். இல்லாவிட்டால் கடை நடத்த முடியாது.
வியாபாரமும் களை கட்டுவதால் இந்த கடைக்காரர்கள் குடிமகன்களுக்கு தேவையான பொருட்களை தாரளமாக விற்கின்றனர். பாவம் போலீசார் என்ன செய்ய முடியும். மொத்த குடிமகன்களோடு ஒப்பிடுகையில் போலீஸ் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. பல்வேறு பணிச்சுமைகள் உள்ளன. இதனை மட்டும் கண்டுகொள்ள முடியாது. அத்தனை தெருக்களையும் போலீசாரால் கண்காணிப்பது இயலாத காரியம். எனவே இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல் போலீசாரே திணறி வருகின்றனர்.