சிறுவர்களுக்கு கூட எளிதாக கிடைக்கும் தேனியில் தாராளமாக புழங்கும் கஞ்சா

தேனியில் கஞ்சா வியாபாரத்தையும், அனுமதியற்ற பாட்டில் வியாபாரத்தையும் கட்டுப்படுத்த வேண்டும்.

Update: 2023-11-26 17:35 GMT

தேனியில் சிறுவர்களுக்கு கூட எளிதாக கிடைக்கும் வகையில் கஞ்சா புழக்கம் தாராளமாக உள்ளது. இதனை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தேனியில் கஞ்சா விற்பனை மிகவும் தாராளமாக நடந்து வருகிறது. பள்ளி மாணவர்கள், சிறுவர்களுக்கு கூட மிக, மிக எளிதாக கிடைக்கிறது. குறிப்பாக குறிஞ்சிநகர், கக்கன்ஜி காலனி, வெங்கலா முனீஸ்வரன் கோயில் பகுதி, காந்திநகர், கே.ஆர்.ஆர்., நகர், பொம்மைய கவுண்டன்பட்டி, அல்லிநகரம், தேனி கொட்டகுடி ஆற்றுப்பாலம், ஸ்ரீராம் தியேட்டர் திட்டச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் தாராளமாக கிடைக்கிறது. பல இடங்களில் அனுமதியின்றி மதுபாட்டில் வியாபாரமும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பழைய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில் வியாபாரம் நடைபெற்று வருகிறது. 

குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சிலர் வந்து காத்திருக்கும் நபர்களுக்கு கஞ்சா விநியோகித்து விட்டு, பணம் வசூலித்துக் கொண்டு தலை மறைவாகி விடுகின்றனர். இரவு ஏழு மணிக்கு மேல் தேனியில் ஒதுக்குப்புறமான இடங்களுக்கு சென்றாலே கஞ்சா புகை நெடி மிக அதிகமாகவே இருக்கும். கஞ்சா விநியோகிப்பது யார் என்பதை கண்டறிந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லுாரி மாணவர்கள், சிறுவர்கள் கூட கஞ்சா புகைத்து விட்டு, போதையில் உலவுகின்றனர்.

அதே போதையுடன் டூ வீலரில் ஊர் சுற்றுகின்றனர். இதனால் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் போலீசார் டூ வீலர் மூலம் ரோந்து பணி மேற்கொண்டு கஞ்சா புகைப்பவர்களை எச்சரித்தால் கூட ஓரளவு கட்டுக்குள் வரும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News