புத்தாண்டு பாதுகாப்பு: ஊருக்குள் கவனம் செலுத்தியபோது வனத்திற்குள் அத்துமீறல் ?
வனத்திற்குள் அத்துமீறிய கொண்டாட்டங்கள் நடந்ததாக பல்வேறு பகுதிகளில் இருந்தும் புகார் வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேற்று இரவு முதல் தொடர்ந்து நடந்தன. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் மக்கள் புத்தண்டை வரவேற்றனர். பல ஆயிரம் போலீசார் இரவு முழுவதும் கண் விழித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அத்தனை நெடுஞ்சாலை ஓரங்களிலும் உள்ள கடைகள் கூட திறந்திருந்தன. இரவு முழுவதும் ரோந்து பணியில் இருந்த போலீசார் குடித்து விட்டு வாகனம் ஒட்டியவர்களையும், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியவர்களையும் கூட பிடித்து அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுத்தனர்.
இரவு ஒரு மணிக்கு மேல் யாரையும் வெளியில் நடமாட அனுமதிக்கவில்லை. இவ்வளவு முன் எச்சரிக்கை பணிகளை செய்திருந்ததால், பொதுமக்கள் விபத்தின்றி புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்தி முடித்தனர். மக்களின் வாழ்விட பகுதிக்குள் போலீஸ் கெடுபிடி அதிகம் இருந்ததால், பல இடங்களில் போதை மற்றும் உல்லாச பிரியர்கள் வனத்திற்குள் சென்று விட்டனர். ஒட்டுமொத்த கவனமும் மக்களை பாதுகாப்பாக புத்தாண்டு கொண்டாட வைக்க வேண்டும் என இருந்த நிலையில், வனத்திற்குள் கட்டுக்கடங்காத அத்துமீறல்கள் நடந்துள்ளதாக விவசாயிகள் புகார் எழுப்பி உள்ளனர்.
குறிப்பாக தேனி மாவட்டம் மேகமலைப்பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த விடுதிகள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகவும், அங்கு பல நுாறு பேர் தங்கி குடித்தும், பல்வேறு போதைப் பொருட்களையும் பயன்படுத்தியும் புத்தாண்டு கொண்டாடியதாகவும் புகார் எழுந்துள்ளது.
அதேபோல் போடி வடக்கு மலைப்பகுதியில் கொட்டகுடி, டாப் ஸ்டேஷன், எல்லப்பட்டி, குரங்கனி வனப்பகுதிகளில் ஏராளமான குடில்களை கேரளத்தவர்கள் அமைத்துள்ளனர். இங்கு புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் சட்ட விரோதமான அத்தனை செயல்களும் நடந்ததாகவும், கொண்டாட்டம் என்ற பெயரில் வனச்சட்டங்களை மீறியதாகவும், வனத்திற்குள் கடும் சுற்றுச்சூழல் பாதிப்பினை ஏற்படுத்தியதாகவும் விவசாயிகள் கடுமையான புகார் எழுப்பி உள்ளனர். இந்த குற்றங்களுக்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும், இதனை மதுரை ஐகோர்ட் கிளையில் ஒப்படைத்து வழக்கு தொடர உள்ளதாகவும் இனிமேல் வனக்குற்றங்களை முற்றிலும் தடுக்கும் வகையில் கோர்ட்டில் உத்தரவு பெற உள்ளதாகவும் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதேபோன்ற வனக்குற்றங்கள் மாநிலம் முழுவதும் அத்தனை வனப்பகுதிகளிலும் நடந்துள்ளது. வனத்துறையில் ஆட்கள் பற்றாக்குறை அதிகம் உள்ளதால், வனத்துறையாமல் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடியவில்லை. முடிந்த அளவு நாங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தோம். இரவு முழுவதும் வனக்குற்றங்களை தடுக்கவும், வேட்டைகளை தடுக்கவும் ரோந்து சென்றோம். எங்கள் பார்வையில் படும் வகையில் எந்த பகுதியிலும் குற்றங்கள் நடக்கவில்லை. ஒரு வேளை எங்களுக்கு தெரியாமல் கேரளாவை ஒட்டி உள்ள பகுதிகளில் குற்றங்கள் நடத்திருக்கலாம். கேரளாவினை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் இது போன்று நடப்பது சகஜம் தான் என வனத்துறையினர் கூறி வருகின்றனர்.