புதிய கொரோனா பரவல்: சீனா சிக்கலில் மாட்ட காரணம் என்ன? இந்தியா சமாளிக்குமா
சீனாவில் வேகமாக பரவி வரும் பி.எப்.,7 என்ற ஒமிக்ரான் வகையினை சேர்ந்த கொரோனா இந்தியாவில் மூன்று பேருக்கு கண்டறியப்பட்டது;
சீனாவில் கொரோனா தொற்றின் புதிய உருமாற்றமான ஒமிக்ரான் வகையினை சேர்ந்த பி.எப்.,7 என்ற கொரோனா வேகமாக பரவி வருகிறது. வழக்கம் போல் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. சீன அரசோ வழக்கம் போல் உயிரிழப்புகளை மறைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகளை விதிக்க கூடாது என மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சீனா தன் மக்களுக்கு வழங்கிய சினோபாம், சினோவேக் வகை தடுப்பூசிகள் தரமற்றவை. எனவே தான் கொரோனா மீண்டும் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்று பரவலாக புகார் எழுந்துள்ளது. சீனாவை கலங்கடித்து வரும் புதிய வகை கொரோனா தொற்று அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் குஜராத்தில் இருவருக்கும், ஒரிசாவில் ஒருவருக்கும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை கொரோனா கடுமையான காய்ச்சல், சளி, உடல் வலியுடன் தொடங்குகிறது. தொடர்ந்து இருமல், தொண்டை வலி, செவித்திறன் குறைபாடுகளும் இருக்கும். வாசனையை உணர முடியாது. நெஞ்சுவலி, உடல் நடுக்கம் ஏற்படும். இது வரை இந்த வகை கொரோனா அதாவது பிஎப் 7 வகை கொரோனா சீனாவில் தான் கடும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.
இதற்கு முக்கிய காரணத்தை இந்திய மருத்துவர்கள் தெளிவாக விளக்கி உள்ளனர். சீனாவில் மொத்தமே 100 கோடிப்பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல் காரணம். பாக்கி 45 கோடிப்பேருக்கு போடப்படவில்லை. அதுவும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 40 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியும் திறன் குறைந்தவை. 60 வயதிற்கு மேற்பட்ட 60 சதவீதம் பேருக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை. இந்த வகை கொரோனா முதன் முதலில் பரவிய கொரோனா அலை போல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களையே அதிகம் தாக்குகிறது. இதனால் தடுப்பூசி திறன் குறைவு, தடுப்பூசி போடாதவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால் தான் தற்போது உயிரிழப்புகள் சீனாவில் அதிகம் உள்ளன.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, இந்தியாவில் 90 முதல் 95 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதுவும் இந்தியா உட்பட இந்த நாடுகளில் மூன்று டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் திறனும் அதிகம். தவிர இந்த நாடுகளில் அத்தனை பேருக்கும் கொரோனா தொற்று பரவி இயற்கையான எதிர்ப்பு சக்தியும் உருவாகி உள்ளது. இந்த நாடுகளில் போடப்பட்ட தடுப்பூசியும் திறன் மிகுந்தது. இதனால் தான் சீனா தவிர வேறு உலக நாடுகள் எதிலும் பிஎப்.7 வகை ஒமிக்ரான் கொரோனாவால் உயிரிழப்பு பதிவாகவில்லை.
அதற்காக அலட்சியம் காட்டி விடக்கூடாது. தடுப்பூசி போட்டிருந்தாலும், முறையாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் நிச்சயம் பிஎப்.7 வகை கொரோனா பாதிக்கும். ஆனால் உயிரிழப்பு இருக்காது. வழக்கம் போல் தடுப்பூசி போடாதவர்கள், மிக, மிக பலகீனமான நிலையில் இருப்பவர்களில் சிலர் மோசமாக பாதிக்கப்படலாம் என்று இந்திய மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
சென்னையில் பேட்டியளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், 'தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு எதிராக 90 சதவீதம் பேரிடம் எதிர்ப்பு சக்தி உள்ளது என நம்பிக்கை தரும் வார்த்தைகளை பேசியுள்ளார். வீணாக மக்கள் அச்சப்பட வேண்டாம். அதேநேரம் அலட்சியம் காட்டி விபரீதத்தில் மாட்டிக் கொள்ள வேண்டாம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கையாண்டால் போதும். தொற்று கண்டறியப்பட்டால் அடுத்த சில நிமிடங்களில் மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ள சீனாவிலேயே இன்னும் லாக்டவுன் போடவில்லை. இதனால் இப்போது நாம் பற்றியெல்லாம் தேவையில்லாமல் சிந்திக்க வேண்டாம். அரசு அதனை பார்த்துக் கொள்ளும் என டாக்டர்கள் நம்பிக்கையூட்டி வருகின்றனர்.