கூடலுாரில் 4வது தலைமுறையாக பொது சேவையில் நடராஜ் பிள்ளை குடும்பம்
கூடலுாரில் 4வது தலைமுறையாக நடராஜ் பிள்ளையின் பேத்தி .லோகநாயகி பொது சேவையில் இறங்கியுள்ளார்.;
கூடலுார் நகராட்சியின் அ.தி.மு.க., சேர்மன் வேட்பாளர் பா.லோகநாயகி மக்களிடம் ஓட்டு சேகரித்தார்.
தேனி மாவட்டம், கூடலுாரில் சுதந்திரபோராட்ட தியாகியான சோலைப்பிள்ளை சுதந்திய இந்தியாவின் முதல் நாட்டாமையாக இருந்தார். இவருக்கென தனி வரலாறு உள்ளது. இவரது மகன் நடராஜ் பிள்ளை ஜில்லா சர்வேயராக பணிபுரிந்தவர்.
சோலைப் பிள்ளை, நடராஜ் பிள்ளை காலத்தில் கூடலுார் குடிசைகள் நிறைந்த பகுதியாகவும், வறுமை நிறைந்த ஊராகவும் இருந்தது. அப்போது நடராஜ்பிள்ளை குடும்பம் தான் தர்மகர்த்தா குடும்பம் போல் விளங்கியது. பல நுாறு பேருக்கு வாழ்வாதாரங்களை ஏற்படுத்தி கொடுத்தது. உணவு, உடை, இருப்பிடம் வழங்கியது.
நடராஜ் பிள்ளையின் மகன் பாண்டியராஜ். இவர் முழு நேர மக்கள் பணிதான் செய்து வருகிறார். கடந்த இருபது வருடங்களாக ஆண்டிற்கு 600 முதல் 700 (6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 படிக்கும்) மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள், பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கி வருகிறார்.
பலருக்கு கல்வி உதவித்தொகை செய்து வருகிறார். என்ன தான் குடும்ப பாரம்பரிய சொத்து இருந்தாலும், பாண்டியராஜ் தனது சொந்த தொழில் மூலம் (கேபிள் தொழில்) வரும் வருவாயில் இருந்தே இதனை செய்து வருகிறார். தவிர பல்வேறு பொதுப்பதவிகளையும் வகித்துள்ளார்.
பாண்டியராஜ் மகள் பா.லோகநாயகி பொறியியல் உயர் கல்வி கற்றவர். மிகப்பெரிய கம்பெனியில் மாதம் பல லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியவர். ஐ.ஏ.எஸ்., படிக்க வேண்டும் என்பதற்காக தனது வேலையை விட்டு விட்டு படித்து வந்தார். இந்த நிலையில் கூடலுார் 16வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் சற்றும் யோசிக்காமல் அ.தி.மு.க., மாவட்ட தலைமை பா.லோகநாயகியை நகராட்சி தலைவர் வேட்பாளராக அறிவித்து வார்டு கவுன்சிலர் தேர்தலில் களம் இறக்கி உள்ளது.
ஐ.ஏ.எஸ்., படித்தாலும் மக்கள் பணி தான். நகராட்சி தலைவராக இருந்தாலும் மக்கள் பணி தானே என குடும்பத்தினர் இவரிடம் பேசி, தற்போது களம் இறக்கி உள்ளனர். இவரது குடும்ப பாரம்பரியமும், குடும்பத்தினரின் சேவையுமே இவரை கரைசேர்த்து விடும் என கூடலுார் பொதுமக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.