முல்லைப்பெரியாறு அணைப்பிரச்னையில் ஒன்று சேர்ந்த விவசாய சங்கங்கள்

Mullaperiyar Dam Issue- முல்லைப்பெரியாறு அணைப்பிரச்னையில் இதுவரை தனித்தனியாக போராடி வந்த தமிழக விவசாய சங்கங்கள் தற்போது ஓரணியில் இணைந்துள்ளன.

Update: 2022-07-21 03:43 GMT

முல்லைப்பெரியாறு அணை பைல் படம்.

Mullaperiyar Dam Issue- முல்லைப்பெரியாறு பிரச்னையில் தேனி மாவட்டத்தில் அன்வர்பாலசிங்கம் தலைமையிலான பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கம், கொடியரசன் தலைமையிலான முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம், டாக்டர் சதீஷ்பாபு தலைமையிலான பாரதீய கிஷான் விவசாயிகள் சங்கம் தனித்தனியே போராட்டம் நடத்தி வந்தன.

சமீபத்தில் அதிகரித்து வரும் கேரளாவின் அத்துமீறல் இவர்களை ஒன்று சேர்த்துள்ளது. இந்த சமரச முயற்சிக்கு முதலில் விதை போட்டவர் அன்வர்பாலசிங்கம். இவர் டாக்டர் சதீஷ்பாபு, கொடியரசன் ஆகியோருக்கு தங்களுடன் இணைந்து செயல்படுமாறு அழைப்பு விடுத்தார். அவர்களும் ஏற்றுக் கொண்டனர். தனித்தனி அமைப்பாக இருந்தாலும், இனிமேல் முல்லைப்பெரியாறு அணைப்பிரச்னையில் ஓரணியில் நாங்கள் செயல்படுவோம். எங்களை பொறுத்தவரை தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களின் ஜீவாதாரமான முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் தமிழகத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது தான். பெரியாறு பாசன விவசாயிகள் நடத்தும், தேவிகுளம், பீர்மேடு, உடும்பஞ்சோலை தாலுகாக்களை தமிழகத்துடன் இணைக்க கோரும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் நாங்களும் பங்கு பெறுவோம். முழுவீச்சில் செயல்படுவோம் என கொடியரசன், சதீஷ்பாபு உட்பட அனைவரும் ஒரு சேர அறிவித்துள்ளனர்.

அதேபோல் தமிழகத்தில் பெரியாறு பாசனம் அல்லாத பிற மாவட்டங்களில் செயல்படும் விவசாய சங்கங்களும் .அன்வர்பாலசிங்கத்தை தொடர்பு கொண்டு உங்களுடன் நாங்களும் போராட்டத்தில் பங்கேற்போம் என ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் இப்போது தான் போராட்டக்களம் களை கட்டுகிறது. அதிகாரிகளின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே முல்லைப்பெரியாறு அணைப்பிரச்னையில் இழந்த உரிமைகளை தமிழகம் மீட்க நல்ல சகுனங்கள் தென்படத்தொடங்கி உள்ளன என விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News