முல்லை பெரியாறு அணை விவகாரம்: தனிநபர் வழக்குகளை நிராகரிக்க வேண்டும்
முல்லை பெரியாறு அணையில் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்புகளை அமல்படுத்துமாறு கேரளாவிற்கு நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும்;
முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக அளிக்கப்படும் தனி நபர் வழக்குகளை உச்சநீதிமன்றம் நிராகரிக்க வேண்டுமென தமிழக விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக முல்லை பெரியாறு பாசன ஐந்து மாவட்ட விவசாய சங்க நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
உச்ச நீதிமன்றம் கடந்த 2006 மற்றும் 2014 ஆகிய இரண்டு ஆண்டுகளில் கொடுத்த தீர்ப்பே இறுதியான தீர்ப்பு என்கிற முடிவுக்கு, மத்திய நீர்வள கமிட்டியும், உச்சநீதிமன்றமும் வரவேண்டும். ஏனென்றால் அந்த இரண்டு தீர்ப்புகளையும் நடைமுறைப்படுத்துவதற்கான வேலைகளை இன்னும் உச்ச நீதிமன்றம் தொடங்கவில்லை. இந்த நிலையில், டாக்டர் ஜோ ஜார்ஜ், வழக்கறிஞர் ரசூல் ஜோய் போன்ற ஞாயிற்றுக்கிழமை புரட்சியாளர்கள்,கையில் பணம் இருக்கிறது என்பதற்காக, தேவையில்லாமல் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று தனிநபர் வழக்குப் போடுவதும், உச்ச நீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டு, தமிழக அரசிடமும் கேரள அரசிடமும் பதில் மனு தாக்கல் செய்யச் சொல்வதும் ஏற்புடைய செயல் அல்ல.
ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை காலத்தின் இறுதியிலும், இதுபோன்ற தனிநபர்கள் உச்சநீதிமன்றத்திற்கு செல்வதும், அணை உடையப் போகிறது என்று கூப்பாடு போடுவதும் சமீப காலங்களாக அதிகரித்திருக்கிறது. தான் கொடுத்த தீர்ப்பை மத்திய நீர்வளக் கமிட்டி மூலம், அமல்படுத்த வேண்டும் என்கிற நெருக்கடியை உச்சநீதிமன்றம், கேரளாவிற்கு கொடுத்தாலொழிய இந்த பிரச்சினை முடிவுக்கு வர வாய்ப்பு இல்லை.
எதற்கெடுத்தாலும் தனிநபர்கள் பன்மாநில நதிகள் விஷயத்தில் தலையிடுவார்கள் என்றால், அந்தத் தண்ணீரை நம்பி இருக்கக்கூடிய விவசாயிகள் என்ன செய்துவிட முடியும். டாக்டர் ஜோ ஜார்ஜ் மற்றும் வழக்கறிஞர் ரசூல் ஜோய்க்கும் பெரியாறு அணையின் கடைமடைப் பகுதியில் என்ன நடக்கிறது என்று தெரியுமா...? நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்டு உச்சநீதிமன்றம் கையில் சாட்டையை எடுத்தாலொழிய முல்லைப் பெரியாறு பிரச்னைக்கு முடிவு ஏற்படப் போவதில்லை.
கேரளாவில் பெரியாறு அணை குறித்து தொடர்ச்சியாக பரப்பப்படும் விஷமப் பிரசாரங்களை செய்யும் நபர்களை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்கிற எங்களுடைய கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் பரிசீலனை செய்ய வேண்டும்.999 ஆண்டுகள் என்பது வெறும் நிலத்திற்கு மட்டுமல்ல, அணைக்கும் சேர்த்துதான் என்ற உண்மையை கேரளம் உணர வேண்டுமென்று, ஐந்து மாவட்ட விவசாய சங்க நிர்வாகிகள் எஸ் ராஜசேகர் (எஸ்.ஆர்.தேவர்) தலைவர், இ.சலேத்து-முதன்மைச் செயலாளர், பொன் காட்சி கண்ணன்- பொதுச்செயலாளர் எஸ்.பி. லோகநாதன்- பொருளாளர்,ச.அன்வர் பாலசிங்கம்- ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.