முல்லைபெரியாறு அணை விவகாரம்... அரசு எதிர்கொள்ள வேண்டிய கடும் சவால்கள்
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கு கடும் சவால்கள் காத்திருக்கின்றன என விவசாயிகள் தெரிவித்தனர்;
முல்லை பெரியாறு அணை பிரச்னையில் தமிழக அரசுக்கு இனிமேல் தான் கடும் சவால்கள் காத்திருக்கின்றன என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறினார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: பேபி அணைக்கு செல்லக்கூடிய வழியில் உள்ள 15 மரங்களை வெட்ட கேரள அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு தமிழக முதல்வரும் நன்றி தெரிவித்துள்ளார். இது வரவேற்க கூடிய நிகழ்வு தான். ஆனால் இந்த 15 மரங்களை வெட்ட நாம் நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டும். இந்த மரங்களை வெட்ட அனுமதி கொடுத்துள்ள சிறிய முயற்சி, தமிழக- கேரள உறவுகளை வலுப்படுத்த உதவும் என நம்புகிறேன்.
இந்த 15 மரங்களை வெட்ட அனுமதி கொடுத்ததால் மட்டும் தமிழகத்திற்கு நீதி கிடைத்து விட்டது என நம்பவே முடியாது. காரணம் முல்லை பெரியாரில் புதிய அணை என்கிற அறிவிப்பை கேரள அரசு வாபஸ் பெற வேண்டும். ஏனெனில் புதிய அணை கட்ட 1450 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போட்டு திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீட்டை தாக்கல் செய்துள்ளது கேரள அரசு.
இதற்காக புதிய அணை கட்ட பஞ்சமலை எஸ்டேட் என்ற இடத்தில் இடத்தை தேர்வு செய்தும் தயாராக கேரள அரசு வைத்துள்ளது. மரங்களை வெட்டிய பின்னர் பேபி அணையினை நாம் பலப்படுத்துவோம். அதன் பின்னர் என்ன நடக்கும். அணையில் 152 அடி தண்ணீர் தேக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கும். அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் ஆனைவாச்சாலில் முழங்கால் அளவு உயரம் தண்ணீர் தேங்கும். தேக்கடியில் 60 ரிசார்ட்களில் 8 அடி முதல் 9 அடி உயரம் தண்ணீர் தேங்கும். அந்த ரிசார்ட்டுகள் தண்ணீரில் மூழ்கும்.
அதனை கட்டிய கேரள அரசியல்வாதிகளும், முன்னாள் அதிகாரிகளும் அதனை வேடிக்கை பார்ப்பார்களா? நிச்சயம் இதனை ஏற்க மறுத்து போராடுவார்கள். இந்த மிகப்பெரிய சவாலை தமிழக அரசு சந்தித்து மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். இன்று முல்லை பெரியாறு அணை பிரச்னை தான் தமிழக, கேரள மாநிலங்களின் பேசும் பொருளாக மாறி உள்ளது.
இந்த இக்கட்டான நிலையில், ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் தமிழக அரசுக்கு மிகவும் உறுதுணையாக நிற்கும். தி.மு.க., அ.தி.மு.க., அரசுகள் மாறி, மாறி தொடர்ச்சியாக 42 ஆண்டுகள் நடத்திய சட்டப்போராட்டத்தின் விளைவாக அணையில் 142 அடி நீர் தேக்கும் உரிமை பெற்றுள்ளோம். இதனை நடைமுறைப்படுத்த விடாமல் கேரளாவில் சிலர் தடுத்து வருகின்றனர்.
தமிழகத்துடன் கேரள உறவு நீடிக்க வேண்டுமானால், கேரள அரசு முல்லை பெரியாறு அணைக்கு எதிரான அறிவிப்புகளை வாபஸ் பெற்று, குறிப்பாக புதிய அணை அறிவிப்பை வாபஸ் பெற்று, முல்லை பெரியாறு பல மாநில நதி என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். மத்திய நீர்வளக் கமிட்டியிடம் முல்லை பெரியாற்றை கேரள மாநில நதியாக பதிவு செய்ததையும் வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.