முல்லைப்பெரியாறு அணைக்கு அனுமதியின்றி சென்றவர்கள் மீது வழக்கு

முல்லைப்பெரியாறு அணைக்கு அனுமதியி்ன்றி சென்று வந்த கேரள, டெல்லி போலீஸ் அதிகாரிகள் உட்பட 4 பேர் மீது கேரள போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-03-17 04:45 GMT

முல்லைப்பெரியாறு அணை பைல் படம்.

முல்லைப்பெரியாறு அணை கவனமாக பாதுகாக்கப்படும் பகுதி என்பது தெரிந்தும், கேரளாவை சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ.,க்கள் இரண்டு பேர், டெல்லியை சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் அவரது மகன் ஆகிய 4 பேர் அனுமதியின்றி பெரியாறு அணைக்கு சென்று,  பகல் முழுவதும் தங்கியிருந்து விட்டு வந்துள்ளனர். இவர்களை தமிழக அரசுக்கு சொந்தமான படகில், ஓட்டுனர் முரளி என்பவர் அழைத்துச் சென்றுள்ளனார்.

படகு ஓட்டுனர் முரளி கேரளாவை சேர்ந்தவர். தனியார் டூரிசம் நடத்துகிறார். சுற்றுலா பயணிகளை தேக்கடியில் உள்ள தமிழக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பயணியர் விடுதியில் தங்க வைப்பார். இவர் மீது பல புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அப்படியிருந்தும் முல்லைப்பெரியாறு அணைப்பகுதிக்கான கேரள டி.எஸ்.பி., நந்தன்பிள்ளை அணைக்கு சென்று வந்த 4 பேர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்துள்ளார். அவர்களை அழைத்துச் சென்ற முரளி மீது வழக்கு பதிவு செய்யவில்லை.

எனவே,  குமுளி தமிழக போலீசார் முரளி மீது வழக்குப்பதிவு செய்து, அவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும். அணைப்பகுதிக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும். இதே நிலை நீடித்தால் அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும் என,  தமிழக ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News