வாங்க.... கொண்டாடலாம்...! விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் அழைப்பு..!
ச.அன்வர்பாலசிங்கத்தின் அழைப்பினை ஏற்று ஐந்து மாவட்ட விவசாயிகள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.
முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேங்கும் நாள் தான் எங்களுக்கு உண்மையான திருநாள், அன்று தான் நாங்கள் விழா கொண்டாடுவோம் என தீபாவளி திருவிழா நெருங்கிய நேரத்தில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் உறுதிபட தெரிவித்திருந்தார்.
அன்வர்பாலசிங்கம் தெரிவித்தபடியே விவசாயிகள் அப்போது தீபாவளியை கொண்டாடவில்லை. காரணம் விவசாயிகள் அத்தனை பேரும் ஒரு படி மேலே போய் 142 அடி நீர் தேங்கினால் தான் (தீபாவளி) விழா கொண்டாடுவோம். அதுவரை நாங்கள் காத்திருப்போம் என தெரிவித்திருந்தனர்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட மக்களும், விவசாயிகளும் எதிர்பார்த்த அந்த பண்டிகை இதோ நெருங்கி விட்டது. முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் 141 அடியை தாண்டி, 142ஐ நோக்கி உயர்ந்து வருகிறது. அணைக்கு நீர் வரத்து கிட்டத்தட்ட விநாடிக்கு 2000ம் கனஅடியாகவும், நீர் திறப்பு விநாடிக்கு 300 கனஅடியாகவும் உள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு, ரூல்கர்வ் முறைப்படியும் அணையில் 142 அடி தண்ணீர் தேக்கும் காலமும் வந்து விட்டது. வருணபகவான் கருணையால் நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது.
நிச்சயம் இன்னும் ஓரிரு நாட்களில் அணை நீர் மட்டம் 142 அடியை எட்டி விடும். அதன் பின்னர் இந்த ஐந்து மாவட்டங்களிலும் கொண்டாட்டங்கள் களை கட்டும் என விவசாயிகள் உறுதிபட தெரிவி்த்தனர். வருணபகவான் வர வேண்டும் என ஐந்து மாவட்ட விவசாயிகளும் வேண்டாத நாள் இல்லை. அவர்களின் வேண்டுதல் நிறைவேறி விட்டது. பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று 18ம் கால்வாயிலும் நீர் திறக்கப்பட்டு விட்டது.
பி.டி.ஆர்., கால்வாயிலும் நீர் திறக்கப்பட்டு விட்டது. 58ம் கால்வாயிலும் நீர் திறக்கப்பட்டு விட்டது. இதே சூழலில் வைகை அணையும் நிரம்பி வழிகிறது. முல்லைப்பெரியாறு தனது கம்பீரத்தை காட்டி எழுந்து நிற்கிறது. உண்மையில் இது தான் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு கொண்டாட்டத்திற்கு உகந்த நேரம் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.