141.90 அடியை கடந்தது முல்லை பெரியாறு: நாளை 142 அடியை தொட வாய்ப்பு
முல்லை பெரியாறு அணை நீர் மட்டம், இன்று 141.90 அடியை எட்டி விட்டது. நாளை நீர் மட்டம் 142 அடியாக நிலை நிறுத்தப்படும்.
தேனி மாவட்டத்தில் நேற்று மழை மிகவும் குறைவாகவே இருந்தது. கூடலுாரில் 5.3 மி.மீ., பெரியாறு அணையில் 4.4 மி.மீ., தேக்கடி, தேனியில் 2 மி.மீ., மட்டுமே மழை பதிவானது. ஆனால் இன்று அதிகாலை முதல், மாவட்டம் முழுவதும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இன்று காலை, முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 2232 கனஅடியாக உள்ளது. மழை பெய்து வருவதால் நீர் மட்டம் மளமளவென உயரும். தற்போது அணை நீர் மட்டம் 141.90 அடியை தாண்டி விட்டது. அணையில் இருந்து விநாடிக்கு 1867 கனஅடி நீர் தமிழகப்பகுதி வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. ரூல்கர்வ் முறைப்படி நாளை அணையில் 142 அடி நீரை தேக்கலாம். மழை தொடர்வதால், அணை நீர் மட்டம் இன்றே 142 அடியை எட்டும். ஆனால் ரூல்கர்வ் முறையால் நாளை அதிகாலை தான் அணை நீர் மட்டத்தை 142 அடியாக நிலை நிறுத்த முடியும்.
கூடுதலாக வரும் உபரி நீர் கேரளா வழியாக திறக்கப்படும். அணை நீர் மட்டம் 142 அடியை தொட்டு விட்டதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.