முல்லை பெரியாறு அணையில் மழையில்லை: 141 அடியாக குறைந்தது நீர் மட்டம்
முல்லை பெரியாறு அணையில் மழை குறைந்ததால், அணைக்கு நீர் வரத்து குறைந்து, நீர் மட்டமும் சரிந்துள்ளது.;
முல்லை பெரியாறு அணையில், ரூல்கர்வ் முறைப்படி இன்னும் ஒரு வாரத்தில், அதாவது நவம்பர் 30ம் தேதி 142 அடி நீர்த்தேக்க வேண்டும். அணையில் கடந்த வாரம் முதலே, நீர் மட்டத்தை 141 அடிக்கு மேல் தினமும் சிறிது, சிறிதாக உயர்த்திக் கொள்ளலாம். ஆனால் முல்லைபெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க தெரிந்த தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ரூல்கர்வ் முறைப்படி தண்ணீரை சேமிக்க தெரியவில்லை. அணையில், கடந்த இரண்டு நாட்களாக மழையில்லை. இதனால் நீர் வரத்து விநாடிக்கு 1992 கனஅடியாக குறைந்துள்ளது.
இந்நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 2000ம் கனஅடி நீரை, தமிழகத்திற்கு திறந்து விட்டு வருகின்றனர். வரத்தை விட வெளியேற்றம் அதிகமாக இருந்ததால் 141.20 அடி வரை உயர்ந்த அணையின் நீர்மட்டம், .20 அடி குறைந்து தற்போது 141 அடியாக உள்ளது. நாளை மறுநாள் முதல் மீண்டும் மழை தொடங்கும் வாய்ப்புகள் உள்ளதால், எப்படியும் அணை நீர் மட்டம் 142 அடியை எட்டி விடும் என விவசாயிகள் நம்பிக்கையோடு உள்ளனர்.