முல்லை பெரியாறு அணை பிரச்னை: திருப்பி அடிக்கும் தமிழக விவசாயிகள்
‘நீ 10 லட்சம் கையெழுத்து வாங்குகிறாயா? நான் ஒரு கோடி கையெழுத்து வாங்குகிறேன்’ என தமிழக விவசாயிகள் திருப்பி அடிக்க தொடங்கி உள்ளனர்.;
முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் கேரள அரசு செய்யும் அடாவடிகளுக்கு தமிழக விவசாயிகள் மீண்டும் பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளனர். அணை பராமரிப்பு பணிகளுக்கு அனுமதிக்க முடியாது என கேரளா முட்டுக்கட்டை போட்டதற்கு, 'நீ என்ன அனுமதி தருவது, அணை அமைந்திருப்பது எங்கள் பகுதி, தேவிகுளம், பீர்மேடு, உடும்பஞ்சோலை தாலுகாக்களை திரும்ப தாருங்கள்' என தமிழக விவசாயிகள் பதிலடி கொடுத்தனர்.
சேவ் கேரளா என்ற அமைப்பினை உருவாக்கி அதில் சில விஷமிகளை தலைமையேற்க வைத்து முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக போராடவும், தவறான பிரச்சாரங்கள் செய்யவும் கேரளா மறைமுகமாக அனுமதியும் வழங்கி, உதவிகளும் செய்து வருகிறது.
இந்த சேவ் கேரளா அமைப்பு முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக 10 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி வருகிறது. இதனை கண்டு கொதித்துப்போன தமிழக விவசாயிகள் 'நாங்கள் முல்லைப்பெரியாறு அணைக்கு ஆதரவாக ஒரு கோடிப்பேரிடம்' கையெழுத்து வாங்குகிறோம் என களத்தில் இறங்கி உள்ளனர்.
கேரள அரசும், சேவ் கேரளா அமைப்பும் எத்தனையோ நாடகங்களை நடத்தினாலும், கேரள மக்கள் முன்பு போல் ஆதரவு தருவதில்லை. தவிர கேரளாவில் உள்ள தமிழர்கள் தமிழக விவசாயிகளின் கோரிக்கையில் நியாயம் உள்ளது என கூறத்தொடங்கி உள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள தமிழர்கள் பல ஆயிரம் பேர், கேரளாவில் பல ஆயிரம் ஏக்கர் எஸ்டேட்டுகளை வைத்துள்ளனர். இதனால் இதுவரை கேரளாவை பகைத்துக் கொள்ள வேண்டாம் என அமைதி காத்த தமிழக விவசாயிகள், பீர்மேடு, உடும்பஞ்சோலை, தேவிகுளம் தாலுகாக்களை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு கொடுக்க தொடங்கி உள்ளனர்.
இப்படி தமிழக விவசாயிகளுக்கு தமிழகத்தின் தரப்பிலும், கேரள வாழ் தமிழர்கள் தரப்பிலும் அதிகரித்து வரும் ஆதரவு கேரள அரசை உண்மையிலேயே கலங்கடித்து வருகிறது. கேரள பத்திரிக்கைகளும் முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் சொதப்பி சிக்கல்களை அதிகரித்து வருவதாக அந்த மாநில அரசை விமர்சிக்க தொடங்கி உள்ளன. இதுவரை சாதகங்கள் இல்லாத சூழ்நிலை இருந்தாலும் விடாமல் போராடிய தமிழக விவசாயிகள் தற்போது தங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகி வருவதால் உற்சாகத்துடன் செயல்பட தொடங்கி உள்ளனர். இனிமேல் கேரளாவின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஒரு எதிர்நடவடிக்கை இருக்கும் என தமிழக விவசாயிகள் உறுதி காட்டுவது இப்பிரச்னை தீர்வு நோக்கி செல்ல தொடங்கி உள்ளது என்பதை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.