எம்.எஸ்.எம்.இ., கவுன்சிலுக்கு தேனி மாவட்ட தலைவர் நியமனம்..!
தேனி மாவட்ட எம்.எஸ்.எம்.இ., கவுன்சில் தலைவராக டாக்டர் பாஸ்கரன் எம்.டி.எஸ்., நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ., கவுன்சிலுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மாநில தலைவராக ஜெபாகிளாரன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பரிந்துரையின் அடிப்படையில் இந்த கவுன்சிலுக்கு தேனி மாவட்ட தலைவராக டாக்டர் பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர தேனி மாவட்டத்திற்கு நான்கு துணைத்தலைவர்களும் 40 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதே அடிப்படையில் நாடு முழுவதும் அத்தனை மாவட்டங்களுக்கும் எம்.எஸ்.எம்.இ., கவுன்சில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உட்பட அத்தனை வசதிகளையும் அரசின் மூலம் பெற்றுத்தர வேண்டும். அந்த தொழிற்சாலைகளை மேம்படுத்துவதன் மூலம் வேலை வாய்ப்பினை பெருக்க வேண்டும்.
அதேபோல் மத்திய அரசின் கடன் உதவி திட்டங்களை புதிய தொழில்முனைவோர்களுக்கு பெற்றுத்தர வேண்டும். அவர்கள் தொழில் செய்ய தேவையான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டும். இது தொடர்பான அறிக்கையினையும் மத்திய அரசிற்கு வழங்க வேண்டும். இந்த எம்.எஸ்.எம்.இ., கவுன்சிலின் செயல்பாடுகள் மூலம் நாட்டின் தொழில் வளர்ச்சி பெரிய அளவில் மேம்படும் என தேனி மாவட்ட தலைவர் டாக்டர் பாஸ்கரன் எம்.டி.எஸ்., தெரிவித்துள்ளார்.