கேட்டதை விட அதிகமான ஒத்துழைப்பு : தமிழக மருத்துவ,சுகாதாரத்துறை நிம்மதி
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்களிடம் கூடுதல் ஒத்துழைப்பு கிடைத்து வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த அரசு கேட்டதை விட மக்கள் அதிக ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர் என தமிழக மருத்துவ, சுகாதாரத்துறை அதிகாரிகள் நிம்மதி தெரிவித்துள்ளனர்.
கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது தொற்று பரவலை தடுக்க அரசு ஊரடங்கு அறிவித்தது. அப்போது மக்களை கட்டுக்குள் கொண்டு வருவது மிகவும் சிரமாக இருந்தது. இந்நிலையில் பரவலில் அதிதீவிர வேகம் கொண்டுள்ள ஒமிக்ரானை கட்டுக்குள் கொண்டு வர மக்கள் ஒத்துழைப்பு எந்த அளவு கிடைக்கும் என தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் சற்று கலக்கத்துடன் தான் இருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனே, 'இன்னும் 15 நாட்கள் மட்டும் மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால், ஒமிக்ரானை வென்று விடலாம்' என பகிரங்கமாகவே வேண்டுகோள் விடுத்திருந்தார்.
பரவலை தடுக்க வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோயில்களுக்கு தடை, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உட்பட சில, சில கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. இதற்கு மக்களிடம் எதிர்ப்பு கிளம்பும் என அரசு எதிர்பார்த்தது. ஆனால் நடந்தது நேர்மாறாக இருந்தது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை மக்கள் ஒரே மனநிலையில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
குறிப்பாக பொங்கல் திருநாளின் போது, எங்குமே அரசு அறிவித்த கட்டுப்பாடுகள் மீறப்படவில்லை. அதேபோல் இன்றுடன் நடந்து முடிந்துள்ள இரண்டு முழு ஞாயிறு ஊரடங்கிலும் மக்கள் ஒட்டுமொத்தமாக வீட்டுக்குள் முடங்கி முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். ஓட்டல்களில் பார்சல் வழங்கலாம் என அரசு அறிவித்தும் கூட பல ஓட்டல்கள் திறக்கப்படவில்லை. பஸ்கள் ஓடவில்லை. பஸ் ஸ்டாண்ட்களில் பகலில் நிற்கவே அச்சப்படும் அளவு மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன.
ஊரடங்கு பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார் நிம்மதியாக நிழலில் அமர்ந்து ஓய்வெடுத்து வருகின்றனர். இது ஏதோ ஓரிரு பகுதிகளில் மட்டும் என நினைத்து விடாதீர்கள். தமிழகம் முழுவதும் இதே நிலை தான் காணப்படுகிறது. இரண்டாவது அலையில் மக்கள் பட்டபாடுகளை மறக்கவில்லை. எனவே, நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையில் மூன்றாவது அலையில் அரசு எதிர்பார்த்ததை விட அதிக ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் என மாவட்ட அளவிலான அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும் இவ்வளவு ஒத்துழைப்பு கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என்று மருத்துவ, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒரே மாதிரி கருத்து தெரிவித்துள்ளனர்.