மாலத்தீவுக்கு செக் வைத்த பிரதமர் மோடி...?!

இந்தியாவின் லட்சத்தீவுக்கு பயணம் செய்ததன் மூலம் பாரத பிரதமர் மோடி மாலத்தீவுக்கு பாடம் புகட்டி உள்ளார்.

Update: 2024-01-09 04:41 GMT

லக்ஷத் தீவில் பிரதமர் மோடி 

பிரதமர் மோடி சமீபத்தில் லட்சத்தீவுக்கு பயணம் செய்த போது, எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்டார். அதில், இயற்கை அழகுடன் அதன் அமைதி மனம் மயங்கச்  செய்கிறது. 140 கோடி இந்தியர்களின் நலன்களுக்காக இன்னும் எப்படியெல்லாம் கடின உழைப்பை வழங்க வேண்டும் என பிரதிபலிக்கும் வகையிலான ஒரு வாய்ப்பையும் வழங்கியது.

லட்சத்தீவு என்பது தீவுகளின் கூட்டம் மட்டுமல்ல. அது, பாரம்பரிய மரபுகள் மற்றும் மக்களின் இயல்பான பண்பின் உண்மை தன்மையை வெளிக்காட்டுவதும் ஆகும். சாகசங்களை விரும்பும் நபர் என்றால், உங்களுடைய பட்டியலில் லட்சத்தீவும் இடம் பெறலாம் என பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக ஊடக பதிவில் வெளியிட்டார்.

பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்திற்கு பின்னர், கூகுளில் லட்சத்தீவு பற்றிய தகவல் தேடல் அதிகரித்தது. லட்சத்தீவு, லட்சத்தீவு விமானம், லட்சத்தீவு விமான நிலையம், கொச்சியில் இருந்து லட்சத்தீவு உள்ளிட்ட பொருள்படும் தகவல்கள் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்டன. இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட 9-வது வார்த்தையாக லட்சத்தீவு இருந்தது.

திடீரென ஆன்லைனில் லட்சத்தீவு பற்றிய தேடல் இந்தியர்களிடையே அதிகரித்து இருப்பது என்பது, உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் லட்சத்தீவில் பார்வையாளர்கள் அதிகரிப்பதற்கான அடையாளங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. லட்சத்தீவு மற்றும் மாலத்தீவில் பீச்சுகள், பவள பாறைகள் உள்ளிட்ட பல்வேறு ஒற்றுமைகள் காணப்படுகின்றன. 

பிரதமர் மோடி 2019-ம் ஆண்டு மாலத்தீவுக்கு பயணம் மேற்கொண்டபோது, ஏற்படுத்தப்பட்ட நீர் சார்ந்த ஆய்வு ஒப்பந்தம் ஒன்றை புதுப்பிக்க முடியாது என்று மாலத்தீவு அரசு கடந்த டிசம்பரில் தெரிவித்து விட்டது. மாலத்தீவில் கடந்த நவம்பரில் அதிபராக பொறுப்பேற்று கொண்ட முகமது மிஜ்ஜு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து எடுத்து வருகிறார். அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பிருந்து, மாலத்தீவில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட இந்திய படைகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆட்சிக்கு வந்த பின்பும் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்ளவில்லை. மாலத்தீவு அதிபராக பதவியேற்ற பின்னர், துருக்கிக்கு பயணம் மேற்கொண்ட முகமது அடுத்து, சீனாவுக்கு பயணிக்க திட்டமிட்டு உள்ளார். துருக்கி மற்றும் சீனா இரண்டும் இந்தியாவின் நலன்களுக்கு எதிராக செயல்பட கூடியவை என பார்க்கப்படும் நாடுகள் ஆகும்.

இந்த சூழலில், பிரதமர் மோடியின் எக்ஸ் பதிவு, அதனை தொடர்ந்து கூகுளில் அதிகரித்த லட்சத்தீவு பற்றிய தேடல்கள் ஆகியவை மாலத்தீவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்திய மக்கள் எடுக்க வழிவகுக்க கூடும் என பார்க்கப்படுகிறது. உலக சுற்றுலா பயணிகளும், மாலத்தீவிற்கு பதில் லட்சத்தீவிற்கு பயணிக்கலாம் என்ற கணிப்பும் நிலவுகிறது.

இதுவரை மாலத்தீவில் இந்திய சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இதே அளவு உலக சுற்றுலா பயணிகளும் சென்று வந்தனர். ஆனால், மாலத்தீவு அதிபரின் பகைமை போக்கால் இனி லட்சத்தீவுக்கு இந்திய சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடிய சூழல் காணப்படுகிறது.

இதன் மூலம் மாலத்தீவின் சுற்றுலா வருவாய் பலத்த அடி வாங்கும். இந்தியர்கள் மாலத்தீவுக்கு செல்வதை நிறுத்தினாலே அந்த நாடு இலங்கை, பாகிஸ்தான் போல் மாறி விடும். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அதிகரித்து வரும் மாலத்தீவுக்கு செக் வைக்கும் வகையில் பிரதமர் மோடியின் செயல் அமைந்துள்ளது என்றும் பார்க்கப்படுகிறது.

இதற்கேற்ப, மாலத்தீவை விட லட்சத்தீவானது மலிவான விலைவாசியை கொண்டுள்ளது. இது இந்திய பயணிகளை அதிகம் ஈர்க்கும். பொருளாதாரத்திற்கு சுற்றுலாவை அதிகம் சார்ந்திருக்கும் மாலத்தீவுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பரவலாக பார்க்கப்படுகிறது. விரைவில் மாலத்தீவின் பொருளாதாரமும் அதல பாதாளத்திற்கு செல்லும், அதற்கான ஏற்பாட்டினை பிரதமர் மோடி செய்து முடித்துள்ளார் என உலக சுற்றுலா நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

Tags:    

Similar News