முண்டக்கயம் கிராம பஞ்சாயத்து நடத்தும் நவீன அசைவ உணவகம்..!
கேரளாவில் சுற்றுலா வரும் மக்களின் வசதிக்காக முண்டக்கயம் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் நவீன உணவகத்தை நடத்தி வருகிறது.;
கேரளாவில் இருந்து கொட்டாரக்கரா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தால் முண்டக்கயம் கிராம பஞ்சாயத்தை தாண்டி செல்ல வேண்டும். இந்த கிராம பஞ்சாயத்து சார்பில் இங்குள்ள ஆற்றின் கரையில், மிகவும் நவீனமான நான்-வெஜ் ஓட்டல் கட்டப்பட்டுள்ளது. பஞ்சாயத்து நிர்வாகமே பணியாளர்களையும் நியமித்து நிர்வகித்து வருகிறது.
இங்கு காபி முதல் பல்வேறு உணவுகள் தரமாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கின்றன. தவிர இங்குள்ள அறைகளில் பயணிகள் ஓய்வெடுக்கும் வசதிகள் உள்ளது. மிகவும் நவீனமான கழிப்பறைகள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக கட்டப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் பலர் பயன்படுத்தும் அளவுக்கு அதிக எண்ணிக்கையில் நவீன கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு பெண்களுக்கு தனியாக குளியல் அறை, உடை மாற்றும் அறைகள், ஓய்வு அறை வசதிகளும் உள்ளன.
காரில் வரும் பயணிகள் பார்க்கிங் செய்ய தனி இட வசதி உள்ளது. உணவுப்பொருட்களுக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும், கழிப்பறை, ஓய்வறை, குளியல் அறை, கார்பார்க்கிங் பயன்படுத்தும் வசதிகள் அனைத்தும் இலவசம். மிகவும் சுத்தமாக பராமரிப்பது தான் இந்த கிராம பஞ்சாயத்து ஓட்டலின் சிறப்பம்சம். சபரிமலை பக்தர்கள் வரும் நேரங்களில் சீசன் நேரத்தில் மட்டும் பக்தர்கள் வசதிக்காக முழுமையான வெஜிடேரியன் உணவகமாக மாறி விடும். சபரிமலை சீசன் முடிந்த பின்னர், மீண்டும் நான்-வெஜ் உணவகமாக மாறி விடும். தரமான உணவுகள் குறைந்த விலையில் கிடைப்பதால், பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.