தேனியில் சத்துணவு ஊழியர்கள் அக்.14 ஆர்ப்பாட்டம்

Midday Meal Workers -பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்

Update: 2022-10-12 05:26 GMT

தேனியில் நடந்த சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் பேயத்தேவன் பேசினார்.

Midday Meal Workers -தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பி. ரவி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சி. பவானி அறிக்கை முன்மொழிந்தார். பின்னர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களின் விவாதம் நடந்தது.

செயற்குழு கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தில், தேனி மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களுக்கு ஆறு மாதமாக உணவூட்டு செலவின தொகை வழங்கவில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சத்துணவு பிரிவில் பணிபுரிந்து வரும் உதவி கணக்கு அலுவலர்,  ஊழியர் விரோத போக்கினை கடைபிடித்து, சத்துணவு ஊழியர்களை மிரட்டும் போக்கை கடைப்பிடித்து வருகிறார். இதனை கண்டிக்க வேண்டும்.

சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் பே.பேயத்தேவன் மீது அவதூறாக பொய் பிரச்சாரங்கள் செய்து வருவதை கண்டித்தும், தேனி மாவட்டத்தில் மாநிலத் தலைவர் ஆர். கலா, மாநில பொதுச் செயலாளர் அ.மலர்விழி ஆகியோர் தலைமையில் இயங்கி வரும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பெயரையும் கொடியையும் தவறாக பயன்படுத்துவதை கண்டித்தும் வரும் வெள்ளிக்கிழமை 14.10.2022 அன்று பிற்பகல் 3 மணிக்கு தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக திட்டமிட்டபடி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம், தமிழ்நாடு சாலை பணியாளர்கள் சங்கம், மற்றும் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் சங்கம், வேளாண்மை துறை அலுவலர் சங்கம், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம், அனைத்து வட்டக்கிளை நிர்வாகிகள் முன்னணி ஊழியர்கள் பங்கேற்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் நாகராஜன், அழகுராஜா, இரா.முத்தையா ஆகியோர் பேசினர்.

நிறைவாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பே.பேயத்தேவன் பேசுகையில், சத்துணவு மையங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்  மூலம் உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது. இவர்கள் எடை குறைவாக பொருட்களை வழங்குகின்றனர். இரவு 8 மணி வரை சப்ளை செய்கின்றனர். இந்நிலையை மாற்றி அமைக்க வேண்டும்.

சத்துணவு ஊழியர்களுக்கு வேலை நிறுத்த காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ஊதியம் வழங்கப்படவில்லை. சத்துணவுப் பணியாளர்கள் ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தணிக்கை பணிகளை நிறைவு செய்து விட வேண்டும். ஓய்வு பெறும் நாளில் எஸ்.பி.எப்., தொகையினை முழுமையாக வழங்க வேண்டும்.

தேனி மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக உணவு தயாரிப்பு செலவினத்தொகை, காய்கறி, எரிபொருள், மசாலா பொருட்கள் வாங்க தேவையான பணம் வழங்கவில்லை. சத்துணவு ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை உதவி கணக்கு அலுவலர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இது போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்டோபர் 14ம் தேதி வெள்ளிக்கிழமை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் மனு வழங்க உள்ளோம் என்று  கூறினார். 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News