கேரளாவிற்கு எல்லை தாண்டும் ஜல்லி கற்கள்..! மூன்று மடங்கு லாபம்..!
தேனி மாவட்டத்தில் இருந்து போடி மெட்டு வழியாக கேரளாவிற்கு ஜல்லி கற்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
கேரளாவினை ஒட்டி உள்ள தேனி மாவட்டத்தில் கல்குவாரிகள் தடையின்றி செயல்படுகின்றன. மணல் குவாரிகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேனி மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் கற்களை உள்ளூர் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேரளாவில் கல் குவாரிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு தேனி மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளில் இருந்து கற்கள் தேவைப்படுகிறது.
இங்கு கல் குவாரிகளில் கற்களை வாங்கி நடைச்சீட்டு போட்டு தார்பாய் போட்டு கட்டி காய்கறி லாரி போல் ஏற்பாடுகள் செய்து, முந்தல் சோதனை சாவடி வரை செல்கின்றனர். சோதனை சாவடியை சரி செய்து விட்டு அங்கிருந்து போடி மெட்டு சென்று விடுகின்றனர். அங்கு கேரள போலீசாரும், வனத்துறையினரும் இவர்களை வரவேற்கின்றனர்.
இதனால் அங்கு எந்த பிரச்னையும் இருக்காது. இப்படி கொண்டு செல்லப்படும் லாரிகளுக்கு இங்கு வாங்கும் விலையை விட லாரி வாடகை கழித்து மூன்று மடங்கிற்கு மேல் லாபம் கிடைக்கிறது. இதனால் தினமும் பல லோடு லாரிகள் கேரளாவிற்கு செல்கிறது. எஸ்.பி., தனிக்கவனம் செலுத்தி இவர்களை தடுத்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.
நமது இயற்கை வளங்களை பணத்துக்காக இப்படி கடத்திச் சென்று விற்பனை செய்வது நமது தாய்ப்பாலை பிறருக்கு விற்பனை செய்வதற்கு சமம். நமது வளம் என்பது நமது சொத்து. அந்த சொத்தினை காப்பாற்ற அரசு அதிகாரிகள் மட்டுமல்ல, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எல்லோருக்கும் கடமை உண்டு. இதை உணர்ந்தாள் மட்டுமே நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள முடியும்.
இதே கேரளாவில் இருந்து இயற்கை வளங்களை நாம் கடத்திக்கொண்டுவர முடியுமா? அவர்கள் விட்டுவிடுவார்களா? இயற்கை வளங்களை காப்பாற்றுவதில் அவர்களுக்கு இருக்கும் விழிப்பு நமக்கு இருக்கிறதா? நம்மில் சில புல்லுருவி அதிகாரிகளே இதைப்போன்று இயற்கை வளங்களை கடத்துவதற்கு உடந்தையாக இருப்பது வேதனையிலும் வேதனை.
அவர்களின் குடும்பத்தினர் வெட்கப்படவேண்டும். அரசு கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக்கொண்டு கடமை உணர்வுடனும், பொறுப்புடனும் வேலை செய்தால் நம் வளங்களை காப்பாற்ற முடியும். அரசும் இவர்களைபோன்றவர்களி அடையாளம் கண்டு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும்.