மெஜுரா கோட்ஸ் ரயில்.... மதுரையின் சுவாராஸ்யம்
1940களிலே மதுரையில் ஒரு ஊருக்கும், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் எனத் தனி ரயில் விட்டனர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.;
இது பற்றி மதுரையை சேர்ந்த ஒருவர் எழுதிய மிகவும் சுவாராஸ்யமான ரசிக்கத்தக்க பதிவினை காணலாம்.
1990களில் ஒரு அரசாங்க தேர்வில் ஒரு கேள்வி இடம் பெற்றிருந்தது. அது என்னவென்றால் மதுரை ரயில் நிலையத்தில் நிற்காத ஒரே ரயில் என்ன? என்று.
1930-40ல் கடும் பஞ்சம் நிலவியது. அப்போது தென் மாவட்டங்களில் உசிலம்பட்டி அதனைச் சுற்றியுள்ள கிராமத்தினர் மதுரை நகரங்களுக்குப் படையெடுக்க ஆரம்பித்தனர். பிரிட்டிஷ்காரரான ’ஹார்வி’ என்பவரால் ஆரப்பாளையம் அருகே Madura Coats மில் என்ற ஒரு மிகப்பெரிய நிறுவனம் இருந்தது. அங்கு ஆண்- பெண் இருபாலருக்கும் பணி வழங்கப்பட்டது. தற்போது தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் பல அப்போதே அமல்படுத்தப்பட்டது.
மதுரையில் ஒரு காலத்தில் அரசாங்க வேலைக்காரங்களுக்குக் கூட பொண்ணு தர மாட்டாங்க, மெஜீரா கோட்ஸ் மில்லில் வேலை பார்த்தால் உடனே பொண்ணு கொடுத்துருவாங்க அந்தளவிற்கு இருந்தது. அங்கு பணி புரிபவர்கள் தங்களது வேலைக்குப் பதில் வாரிசுகளை வேலைக்கு பணியமர்த்திக் கொள்ளலாம் என்ற சட்டமும் இருந்தது. வாரிசு என்றால் தன்னோட வாரிசு என்றில்லை வாரிசு கோட்டா'வில் யாருக்கு வேண்டுமானாலும் அந்த பணியை அந்த நபர் வழங்கலாம்.
எங்க தாத்தா- பாட்டி திருமணம் ஆன புதிதில் 1940களில் அங்கு தான் பணிபுரிந்தனர். அந்த வகையில் எங்க தாத்தாவோட வேலையை எங்க அப்பாவுக்கும், எங்க பாட்டியோட வேலை எங்க சித்தாப்பாவுக்கும் வழங்கப்பட்டது.
தேர்தலில் கூட்டணி கட்சியினரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பாலும் மதுரை தொகுதியைக் கேட்பதற்கு முக்கிய காரணம் இந்த மில்லும் தான். ஏனென்றால் அந்த காலகட்டத்தில் INTUC, AITUC தொழிற்சங்கங்கள் நிர்வாகத்தின் செவிகளாகச் செயல்பட்டது. இந்நிலையில் கம்யூனிஸ்ட்டின் தொழிற்சங்கமான CITU மதுரை கோட்ஸ் மில்லில் வலுவாக இருந்தது.
முன்னனி தலைவர்களான 'ராமமூர்த்தி, ஜானகியம்மாள், வி.பி.சிந்தன் உள்ளிட்டோர் மதுரையில் நிறைய போராட்டங்களை முன்னெடுத்தனர். அதற்கு முன்பும் மதுரை நிறைய படிப்பகங்கள் ஓபுளா படிப்பகம்- பேச்சியம்மன் படித்துறை- கரிமேடு போஸ் வாசகசாலை- கருவேப்பிலைகாரர் தெருவில் லஜபதி நிலையம்- வடக்குவெளி வீதி தத்தர் நிலையம்- தல்லாகுளம் நேரு வாலிபர் சங்கம் -முனிச்சாலை சமத்துவ வாலிபர் சங்கம்- தைக்கால் பொதுஜன படிப்பகம்- சப்பாணி கோவில் தெரு தியாகி பாபுகான் படிப்பகம்- தலைவிரிச்சான் சந்து சரஸ்வதி நிலையம்- மணிநகரம் பொன்விழா வாசகசாலை-தெற்குமாரட் வீதி ஐக்கிய முற்போக்கு படிப்பகம்-வடக்குமாசி வீதி பொதுஜனமன்றம்- பூந்தோட்டம் பத்மாயினி படிப்பகங்கள் மூலம் அரசியல் பேசி இயக்கம் வளர்க்கப்பட்டது.
மேலும் சீதாலட்சுமி மில், மகாலட்சுமி மில், பாண்டிய மில் என்று எண்ணற்ற மில் தொழிலாளர்கள் நிறைந்திருந்தது. அந்த தொழிலாளர் பிரச்சனையை முன்னெடுத்ததில் மார்க்சிஸ்ட்கள் வளர்ந்ததும் ஒரு காரணம். தீபாவளி பண்டிகை சந்தோஷம் வருகிறதோ இல்லையோ போனஸ் என்பது ஒரு கொண்டாட்ட மனநிலையே, மற்ற தொழிற்சங்கங்கள் Compromise ஆகிவிடும். CITU சதவீதத்தை உயர்த்த போராட்டத்தை தீவிரப்படுத்தும். Strike என்றால் மில் வேலையைப் பொறுத்தமட்டில் ஒரு சிப்டில் 50பேர் வரவில்லையென்றாலும் புரொடக்சன் பெரிதளவில் பாதிக்கும்.
ஒரு முறை எங்க அப்பா நான் பேப்பர்ல வந்திருக்கேனு சொன்னாரு, நானும் சந்தோஷமா பேப்பர் வாங்கி பார்த்தேன். போராட்டத்தை கலைக்க போலிசார் தடியடி நடத்துகின்றனர். அனைவரும் சிதறி ஓடுகின்றனர். எங்க அப்பன் என்ன பண்ணுறாருனா அவரோடு செருப்பு பிஞ்சி போச்சு, அந்த செருப்பை கையில எடுத்துட்டு போயிறலாம்னு எடுக்க முற்பட்டபோது லத்தியில போலிஸ் ஒரு அடி குடுக்கின்றனர். அந்த புகைப்படம் செய்திக்கு பயன்படுத்தியுள்ளனர். அந்த புகைப்படத்தை காண்பித்து இது நான் தான் என சொன்னார். அட போப்பா என கூறினேன்.
மதுரை முன்னாள் எம்.பியான பி.மோகனும் அங்கு பணிபுரிந்தவரே, ஏன் தற்போது எம்.பியாக உள்ள சு.வெங்கடேசனின் தந்தை சுப்புராமும் அங்கு பணிபுரிந்தவரே. அதன் நீட்சியாக தான் என் தந்தை எனக்கு மார்க்சிஸ்ட் திரிபுரா முன்னாள் முதலமைச்சர் பெயரான நிருபன் சக்கரவர்த்தி என்று வைத்தார். பெயருக்கு பின்னாடி பட்டங்களை எப்படி போட்டு கொள்கிறோமோ அது போல அந்த காலத்தில் மாசாணம் Madura Coats, மாசாணம், மதுரை கோட்ஸ் என பெயருக்கு பின்னாடி எல்லா இடங்களிலும் ஏன் சைக்கிளில் கூட மதுரை கோட்ஸ் என போட்டுக் கொள்வார்கள்.
1940 காலக்கட்டத்தில் அங்கு வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு தனி காலனி உருவாக்கப்பட்டது. அந்த நிறுவன முதலாளி பெயரான ’ஹார்வி’ என்ற பெயரிலே அந்த ஊருக்கு ஹார்விபட்டி என பெயரிடப்பட்டது. மொத்தம் 603 வீடுகள், ஒரு நபருக்கு 2 1/2 செண்ட்டில் வீடு 2 1/2 செண்டில் தோட்டம் அமைக்க இடம் என ஒரே மாதிரி உருவாக்கப்பட்டது.
எங்க தாத்தா- பாட்டி திருமணம் ஆன புதிதில் அங்கு குடியேறினர். இரண்டு பள்ளிக்கூடம், சுகாதார நிலையம், பூங்கா, மைதானம், நேரம் தெரிய சங்கு ஒலி, பொது மயானம் அனைத்து வீடுகளுக்கும் பாத்ரூம் கழிவு நீர் செல்ல பக்கா Manual வோடு Underground ல் ஊர் கடைசியில் மிகப்பெரிய புல்தோட்டத்தில் பாய்வது போன்று அமைக்கப்பட்டிருக்கும். மதுரையில் முதன்முதலாக Underground ல் கழிவுநீர் அமைப்பு இங்குதான் அமைக்கப்பட்டது. எந்த இடத்திலும் கழிவுநீர் கால்வாயே இருக்காது. தற்போது உள்ள Credit card முறை சுதந்திரத்திற்கு முன்பே பிரிட்டிஸ்காரர்கள் இந்த ஊருக்கு வழங்கப்பட்டது. அதாவது அந்த நிறுவனத்தின் ’மதுரை கோட்ஸ் தொழிலாளர்கள் பண்டகசாலை’ மூலம் வீட்டிற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் Credit முறையில் பெற்று கொள்ளலாம். சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ளப்படும். மற்ற ஊர்களை போல பரிவட்டம், கோயிலில் முன்னுரிமை என்ற எந்த விதிகளும் கிடையாது ஏனென்றால் அங்கு யாரும் பூர்வகுடிகள் கிடையாது. பிழைப்பு தேடி வந்தவர்களே. பிற்காலத்தில் பலர் அந்த வீடுகளை விற்பனை செய்து விட்டு சென்றனர். பிரிட்டிஸ்காரர் காலம் முதல் குறிப்பிட்ட அளவிலானோர் மட்டும் இன்னும் அங்கு வசிக்கின்றனர். அந்த நிறுவனரான ஹார்விக்கு வாரிசு கிடையாது என்பதால் மில்லை நிர்வாகம் செய்ய பல சிக்கல்கள் ஏற்பட்டது.
முக்கியமான ரயில் சேவைக்கு வருவோம், பஞ்சத்தில் உசிலம்பட்டி சுற்றியுள்ள கிராமத்தினர் பலர் ஆந்திரா மாநிலத்தில் முறுக்கு போடும் தொழிலுக்கு சென்று விட்டனர். சிலர் மதுரை நகரங்களில் அதுவும் மதுரை கோட்ஸ் மில் சுற்றியுள்ள பகுதியான ஆரப்பாளையம், பொன்மேனி, கரிமேடு, செல்லூர் உள்ளிட்ட பகுதியில் தஞ்சமடைந்தனர். தொழிலாளர்களுக்கு உருவாக்கியது தான் ஹார்விபட்டி என்ற ஊர். அங்கு ஒரு ரயில் நிலையம் உண்டு. ஹார்வி ரயிலுனு சொல்லுவாங்க, அந்த ரயில் அங்கு பயணத்தை தொழிலாளர்களை கொண்டு ஆரம்பித்து மதுரை ரயில் நிலையத்தை தாண்டி உள்ள மில்-கேட் அதாவது மதுரை கோட்ஸ் மில்லுக்கு சென்று விடும்.
மதுரை ரயில் நிலையத்தில் அந்த ரயில் நிற்காது. திரும்ப மில்-கேட்டில் இருந்து ஹார்விபட்டிக்கு வந்து விடும். எங்க அப்பானு இல்ல நிறைய பேர் புல்-நைட் பார்த்துவிட்டு திரும்ப ஆப்-நைட் போகணும் என்றால் சிப்ட் முடித்துவிட்டு காலை வீட்டில் குளித்து சாப்பிட்டு விட்டு அந்த ரயிலில் போய் படுத்து கொள்வார்கள். ஏனென்றால் அசதில வீட்டில் அயர்ந்து தூங்கிட்டா திரும்ப ரயிலை பிடிக்கணும் என்பதற்காக, மேலும் அங்க கேண்டீன்ல 20 பைசா 30பைசாக்கெல்லாம் சாப்பாடு டீ எல்லாமே கிடைக்கும். அதனால் பொதுவாக மதுரை கோட்ஸ் மில்லில் வேலை பார்ப்பவர்கள் சாப்பாட்டிற்கு பிரச்சனை இருக்காது. எங்க அத்தைகள் 4 பேரில் 3 பேர் கரிமேட்டில் தான் கட்டிக்கொடுத்தனர். அதுபோக எங்க சொந்தக்காரர்கள் எல்லாம் அந்த ரயில்லையே ஏறி எங்க ஊர்க்கு வருவார்கள் அதே ரயிலிலே திரும்ப சென்றுவிடுவார்கள். சென்னையில் மெட்ரோ வருவதற்கு முன்பு, ஏன சுதந்திரத்துக்கு முன்பே ரயில்ல வேலைக்கு போனவிங்கடா மதுரைக்காரங்க.