1 லட்சம் பேருக்கு தடுப்பூசி: தேனி மாவட்ட நிர்வாகம் சுறுசுறுப்பு
தேனி மாவட்டத்தில், வரும் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கேரளாவில் கொரோனா தொற்று குறையவில்லை. அதேபோல் நிபா வைரஸ் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரள எல்லையோரம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கேரள எல்லையோரம் உள்ள தேனி மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடந்தாலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் நுாறு சதவீதம் பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கினை எட்ட தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் ஒரு கட்டமாக, வரும் ஞாயிற்றுக்கிழமை, அதாவது செப்டம்பர் மாதம் 12ம் தேதி மட்டும் ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை திறம்பட செய்ய, போலியோ சொட்டு மருந்து வழங்கல், தேர்தல் பணிகள் இரண்டிலும் ஈடுபடும் அத்தனை அரசு கட்டமைப்புகளையும் ஒரே நேரத்தில் தேனி மாவட்ட நிர்வாகம் களத்தில் இறக்கி உள்ளன.
தேனி கலெக்டர் முரளீதரன் தலைமையில் இந்த பணி, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி, இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக 12 மணி நேரம் நடைபெறுகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் ஒரேநாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக, தேனி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.