வயிற்றுக்காக மனுஷன் இங்கே வெயிலில் காயுறான் பாரு!

நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பிழைப்பிற்காக முழுநேரமும் பலர் வெயிலில் வாடி வருகின்றனர்.

Update: 2023-04-15 04:17 GMT

தேனி  பெரியகுளம் ரோட்டோரம் சிட்டி யூனியன் வங்கி எதிரே கடும் வெயிலில் நின்று மாதுளை விற்கும் இளைஞர்கள்

தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால், வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. சாதாரண நகர்ப்புறங்களில் கூட வெயிலின் கடுமை 102 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி விட்டது. தவிர அனல்காற்றும் வீசுகிறது. இதனால் காலை 7 மணிக்கே வீடுகளில் புழுக்கம் ஏற்பட தொடங்கி விடுகிறது.

சாலையில் 8.30 மணிக்கு மேல் நடக்கவே முடியவில்லை. மதியம் 11 மணியில் இருந்து 3 மணி வரை நேரத்தை கடத்துவதே கடுமையான விஷயமாக உள்ளது. எந்த இடத்தில் இருந்தாலும் ‘‘தந்துாரி அடுப்பருகே நிற்பது போல்’’ அனல் அடிக்கிறது. மாலை 4 மணிக்கு மேல் மெல்ல, மெல்ல குறைந்து ஆறு மணிக்கு இயல்பு நிலை வருகிறது. இந்த போராட்டம் இன்னும் 3 மாதம் வரை இருக்கும். தேனி மட்டுமல்ல… தமிழகம் முழுவதும் இதே நிலை தான் உள்ளது.

அத்தனை விஷூவல் மீடியாக்களும், பிரிண்டிங் மீடியாக்களும், சோசியல் மீடியாக்களும் வெயிலின் பாதிப்பு பற்றியே பேசி வருகின்றன. ஆனால் இந்த வெயிலை பௌர்ணமி வெளிச்சம் போல் கடந்து செல்லும் மனிதர்களும் இருக்கத்தானே செய்கின்றனர். இந்த பட்டியலை பார்க்கலாம்.... இது மிகவும் கவனிக்கத்தக்க விஷயம். இதனை பார்க்கலாம்.

நுங்கு விற்பவர்கள், தண்ணீ்ர் பழம் விற்பவர்கள், கம்மங்கூழ் விற்பவர்கள், பழங்கள் விற்பவர்கள், ஐஸ்கிரீம் விற்பவர்கள், கரும்பு ஜூஸ் விற்பவர்கள், சாலையோரங்களில் கடை அமைத்து துணிகள், பழங்கள் விற்பவர்கள், சைக்கிளில் டீ, வடை விற்பனை செய்பவர்கள், வெள்ளரி பிஞ்சு விற்பனை செய்பவர்கள், கொய்யாப்பழம் விற்பனை செய்பவர்கள் என ஒரு பெரும் பட்டியலே நீள்கிறது.

இவர்கள் காலை ஏழு மணிக்கு வியாபாரத்தை தொடங்குகின்றனர். மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் வியாபாரத்தை முடித்துக் கொள்கின்றனர். சுமார் 11 மணி நேரம் சுட்டெரிக்கும் வெயிலில் நின்று தான் வியாபாரம் பார்க்கின்றனர். சிலர் மட்டும் இவர்கள் வைத்திருக்கும் பழங்கள், வெள்ளரி, கம்மங்கூல், சூடேறி விடக்கூடாது என்பதற்காக அதற்கு மட்டும் சிறிய அளவில் கீற்று பந்தல் போட்டிருப்பார்கள்.

இவர்கள் வெயிலில் தான் அமர்ந்திருப்பார்கள். அவ்வளவு இடம்  தான் இவர்கள் வியாபாரம் செய்யும் இடத்தில்  இருக்கும். இதில் பலரும் தண்ணீர் முறையாக குடிப்பதில்லை. சாப்பாடு முறையாக சாப்பிடுவதில்லை. காரணம் வியாபார நேரத்தில் இயற்கை உபாதை ஏற்பட்டால் கழிக்க வழியில்லை.

எனவே வியாபார நேரத்தில் முழுக்க பட்டினி தான். வியாபாரம் முடிந்த பின்னரே தண்ணீர் சாப்பாடு எல்லாம். வெயிலா... வயிறா... என பார்த்தால் இவர்கள்,  வயிற்றுக்கு முக்கியத்துவம் தந்து, சூரியனையே நிலா போல் வரவேற்கின்றனர்.

காரணம் சூரியனின் வெப்பம் தான் இவர்களின் முதல் மூலதனம். சூரிய வெப்பம் அதிகரிக்க,  அதிகரிக்க,  இவர்களுக்கு வியாபாரமும் அதிகரிக்கும். இதனால் வெப்பத்தை இருகரம் கூப்பி வரவேற்கும் இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

மேலும் இவர்களிடம் பொருட்களை வாங்கும்போது பேரம் பேசாமல் வாங்குவது அவர்களுக்கு நாம் அளிக்கும் உண்மையான பாராட்டு. 

Tags:    

Similar News