ஞாபக சக்தி இழந்தவருக்கு அருளிய மகாபெரியவா!

நினைவாற்றல் இழந்த ஒரு முதியவருக்கு அருளிய மகாபெரியவா தன்னடக்கத்துடன் அது பெருமாளின் லீலை என கூறி ஆசிர்வதித்தார்.;

Update: 2024-06-12 17:45 GMT

தன்னை முன்னிலைப் படுத்தாமல், சர்வ ஜாக்ரதையாக - பெரியவா நிகழ்த்திய ஒரு அதிசயமும், ஒரு ஆச்சர்யமும் பற்றி பார்க்கலாம்.

ஐந்தாறு வைணவர்கள் வந்தார்கள் பளிச்சென்று திருமண் இட்டுக் கொண்டு, வைணவர்களுக்கே உரிய கரை அமைந்த வேட்டிகளைக் கட்டிக் கொண்டு இருந்தார்கள்.

அவர்களில் ஒருவர் மட்டும் சற்று வித்தியாசமாக இருந்தார். சிலை மாதிரி நின்றார். மற்றவர்கள் பெரியவாளை வணங்கிய போது அவர் மட்டும் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை.

"இவர் என் மாமா. திடீரென இவருக்கு உலகத்தில் எதுவுமே ஞாபகம் இல்லாமற் போய் விட்டது. இரவு பகல் தெரியாது. தன் வீடு, பிறர் வீடு தெரியாது. டாக்டர்களுக்கே புரியவில்லை. நூறு டெஸ்ட் எடுத்துப் பார்த்தார்கள். குழம்பிப் போனார்கள். தூக்க மாத்திரை கொடுத்து அனுப்பி விட்டார்கள். பல திவ்ய தேசங்களுக்கு அழைத்துக் கொண்டு போனோம். குணசீலம், சோளிங்கர் போனோம். பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்." என்றார் உடன் வந்தவர்.

பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார் மஹாபெரியவாள்.

பின் அவர்கள் எல்லோரையும், "அச்யுதானந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத்! ..நஸ்யந்தி ஸகலா ரோகா; ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்!!" என்று விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணக் கிரமத்தில் சொல்லப்படும் ஸ்லோகத்தை நூற்றெட்டு தடவை சொல்லச் சொன்னார்கள். அவர்களும் அதேபோல் செய்தனர்.

பெரியவாளுடைய அடுத்த ஆக்ஞைதான், எல்லோரையும் கலவரப்படுத்தியது. மடத்திலிருந்த வஸ்தாத் போன்ற முரட்டு ஆசாமியை அழைத்து, அந்தக் கிழவர் தலையில் பலமாகக் குட்டச் சொன்னார்கள். அவன் அப்படியே செய்தான். ஆச்சரியம்! அடுத்த விநாடி அந்தக் கிழவருக்குப் பூரண ஞாபகசக்தி வந்து விட்டது.

"ஏண்டா ரகு, இங்கே எப்போ வந்தோம்? ஏதோ மடம் மாதிரி இருக்கே? எந்த ஊரு?" என்று கேட்கத் தொடங்கினார். நடந்தைவைகளை விளக்கமாகச் சொன்னதும் பக்தியுடன் பெரியவாளுக்கு வந்தனம் செய்தார் . அவருடன் வந்தவர்களுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. "எத்தனையோ நாட்களாகப் பட்ட கஷ்டமெல்லாம் பத்தே நிமிடத்தில் முடிவுக்கு வந்து விட்டது- பெரியவா அனுக்கிரகத்தாலே" என்று நன்றி சொல்லத் தொடங்கினார் மருமகன். பெருமாள் அனுக்ரஹத்தாலேன்னு சொல்லுங்கோ. பெருமாள் தரிசன பலன் இப்போ கிடைச்சுது. நீங்க எல்லாரும் அச்யுதன்-ஆனந்தன்- கோவிந்தனை வேண்டிக் கொண்டீர்கள். அதற்கு கைமேல் பலன்...." கிடைத்தது என்றார்.

எல்லோருக்கும் பிரசாதமாகப் பழங்களும். துளசி தளமும் கொடுத்தார்கள் பெரியவாள். அணுக்கத் தொண்டர்களுக்குத் தெரியும்- வழக்கம் போல் இந்த நிகழ்ச்சியிலும், பெரியவாள் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவில்லை பெருமாளைத்தான் முன்னே நிறுத்தினார்கள். பெருமாள் தான் எல்லாம் என்பதும், பெரியவாளுக்கு தெரிந்த விஷயம் தானே.

Tags:    

Similar News