எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் சிக்கவில்லை...! மெய்ப்பாதுகாவலர் உறுதி...
முன்னாள் போராளிகள் அனைவருக்கும் தெரியும் பழ.நெடுமாறன் கூறிய தகவல் பொய்தான் என முன்னாள் போராளி சதிஷ் கூறியுள்ளார்
விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பாக பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்துப் பற்றி, நீண்டகாலமாக பிரபாகரனின் மெய்ப்பாதுகலாவராகக் கடமையாற்றிய முன்னாள் போராளி ஒருவர் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் அனைவருக்கும் தெரியும் பழ.நெடுமாறன் கூறிய தகவல் பொய் என்று என முன்னாள் போராளி சதிஷ் என்பவர் கூறியுள்ளார். மேலும் கூறுகையில், பிரபாகரன் நந்திக்கடலில் இருந்து தப்பவும் இல்லை. அவர் வெளியில் வரவும் இல்லை. அவர் மே மாதம் 15, 16 -ஆம் தேதிகளில் முள்ளிவாய்க்காலில் தான் இருந்தார். தப்புவதற்கான எந்த முயற்சியும் அவர் எடுக்கவில்லை. அப்படி தப்புவதற்கான முயற்சியை எடுப்பதென்றால் புதுக்குடியிருப்பு அல்லது கிளிநொச்சியோடு நாங்கள் தப்பி சென்றிருக்கலாம். தலைவர் பிரபாகரன் ஐரோப்பிய நாடுகளிலோ அல்லது காட்டிலோ தப்பி வாழ வேண்டும் என்றால் எப்போதோ போயிருக்கலாம்.
அதனை விட பெரிய உண்மை, பிரபாகரன் என்று இலங்கை அரசாங்கம் காட்டிய உடல் அவருடையது இல்லை. அவருடைய உடல் கிடைக்கும் வகையில் அவர் இறந்திருக்க மாட்டார். நிச்சயம் அவருடைய எலும்புகூட கிடைக்காத அளவில் தான் அவர் மறைந்திருப்பார். எனவே இலங்கை சொல்வதும் பொய். இலங்கை ராணுவத்திடம் பிரபாகரன் சிக்கவில்லை. இலங்கை காட்டியது அவருடைய உடலும் இல்லை என்று சொல்கிறார்.
இதேவேளை வவுனியாவை சேர்ந்த முன்னாள் போராளி அரவிந்தன் என்பவர் கூறுகையில், விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இல்லை. இறுதி யுத்தத்தில் அவர் எங்கும் தப்பித்து சென்றிருக்க மாட்டார். மாறாக அவருடைய முடிவை அவரே தேடிக்கொண்டிருப்பார் என்னை பொறுத்தவரை அண்ணன் அப்படி தான் செய்திருப்பார். அவர் உயிருடன் இருக்கின்றாரா என்பது குறித்து, அவருடன் இறுதி சண்டையின் போது களத்தில் இருந்தவர்கள், நந்திக் கடலில் இருந்தவர்கள் அல்லது அவரின் மெய்ப்பாதுகாவலர்களாக இருந்தவர்கள் பதிலளிப்பது தான் சரியானது. பிரபாகரன் என்ன ஆனார் என்ற விஷயத்தில் நாங்கள் போராளிகள் என்ற வகையில் இதை ஒரு சந்தேகக் கண்ணோட்டத்தில் தான் பார்க்கின்றோம்.
தற்போது இலங்கை அரசாங்கம் தீர்வு திட்டங்களை வழங்கும் போது அதை குழப்பி விடும் ஒரு தரப்பினரின் செயலாகவே இதை பார்க்கின்றோம். அவரைப்பற்றி பொதுவான கருத்து கூறுவது சரியானது இல்லை. இலங்கை தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக பிரபாகரன் பற்றிய தெளிவான விஷயத்தை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் கருத்து எதுவும் சொல்லக்கூடாது என கூறியுள்ளார்.