தொழில் முனைவோருக்கு கை கொடுப்போம்: தேனி கலெக்டர் ஷஜீவனா உறுதி
தேனியில் தொழிற்கடன் வழங்கும் முகாமில் 183 பயனாளிகளுக்கு ரூ.30.07 கோடி கடனுதவிகளை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.
தேனி மாவட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம், மகளிர் திட்டம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறும்பான்மையினர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் மூலம் புதிய தொழில் தொடங்குவதற்காகவும், தொழிலை மேம்படுத்துவதற்காகவும் நடைபெற்ற தொழிற்கடன் வழங்கும் முகாமில் 183 நபர்களுக்கு ரூ.30.07 கோடி மதிப்பிலான கடனுதவிகளை தேனி கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா வழங்கினார்.
இந்நிகழ்வில் கலெக்டர் பேசியதாவது: மாவட்ட அளவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காகவும் தொழில் வளத்தை மேம்படுத்துவதற்காகவும் தொழிற்கடன் வழங்கும் முகாம்கள் நடத்தப்படுகிறது. தொழில் முனைவோர்கள் தொழில் செய்ய முற்படும் போது, தொழிலை பற்றிய முழு புரிதல் இருப்பதுடன், வங்கி கடனை திரும்ப செலுத்துவதிலும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். தொழில் முனைவோரால் மட்டுமே சமுதாயத்தில் வேலைவாய்ப்பினை பிறருக்கு வழங்கி அவர்களின் வாழ்வதாரத்தினை உயர்த்த முடியும்.
தொழில் முனைவோர்கள் மற்றும் தொழிலதிபர்கள் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய புதுமையான தொழில்களை கண்டறிந்து துவங்கிடவும், மதிப்புக் கூட்டப்பட்ட உணவு சார்ந்த தொழில்களை மேம்படுத்திடவும் வேண்டும். மேலும், சமுதாயத்திற்கு பயனளிக்க கூடிய தயாரிப்புகளை கண்டறிந்து உருவாக்கிட முன்வர வேண்டும். இன்று புதிய மற்றும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறிய அளவில் தொடங்கப்படும் நிறுவனங்கள் பிற்காலத்தில் மிகப்பெரிய தொழிற்சாலைகளாக முன்னேற்றுவதற்கு தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.
மேலும், தேனி மாவட்டத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிப்பதற்காக ஜுலை மாதம் நடைபெற்ற தொழிற்கடன் வழங்கும் முகாமில் 244 நபர்களுக்கு ரூ.38.44 கோடி மதிப்பிலான கடனுதவியும், தற்போது நடைபெற்ற முகாமில் 183 நபர்களக்கு ரூ.30.07 கோடி மதிப்பிலான கடனுதவிகள் என இதுவரை மொத்தம் 427 நபர்களுக்கு ரூ.68.51 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
வங்கியின் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கடன் (MSME) திட்டத்தின் கீழ் 78 பயனாளிகளுக்கு தொழில் தொடங்க ரூ.1765.73 இலட்சம் கடனுதவியும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின்(AABC) கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.345.44 இலட்சம் கடனுதவியும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின்(NEEDS) கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.136.93 இலட்சம் கடனுதவியும், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்(PMEGP) கீழ் 25 பயனாளிகளுக்கு ரூ.170.68 இலட்சம் கடனுதவியும், பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டத்தின்(PMFME) கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.167.20 இலட்சம் கடனுதவியும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் (UYEGP) 24 பயனாளிகளுக்கு ரூ.130.20 இலட்சம் கடனுதவியும், தாட்கோ (TAHDCO) நிறுவனத்தின் சார்பில் 42 பயனாளிகளுக்கு ரூ.291.67 இலட்சம் கடனுதவியும் என மொத்தம் 183 நபர்களுக்கு ரூ.30.07 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
முன்னதாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் உற்பத்தி செய்த பொருட்களின் கண்காட்சியினை கலெக்டர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், முன்னோடி வங்கி மேலாளர் டி.மோகன்குமார், மாவட்ட தொழில் மைய மேலாளர் அசோகன், தாட்கோ மேலாளர் சரளா உட்பட பல்வேறு வங்கி மேலாளர்கள், அலுவலர்கள், தொழில் முனைவோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.