ஆங்கில மருத்துவத்தை தமிழில் கற்பது மிக எளிது: அகரமுதலித் திட்ட இயக்குநர்
ஆங்கில மருத்துவத்தை ஆங்கில மொழியில் கற்பதை விட, தமிழ் மொழியில் கற்பது மிகவும் எளிதானது என்று செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநர் கோ. விசயராகவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் ‘மருத்துவக் கலைச்சொல் அகராதித் திட்டக் கருத்தரங்கம்’ நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் தலைமை வகித்துப் பேசினார்.
அப்போது அவர், “ஆங்கிலச் சொற்களுக்கு இணையான புதிய தமிழ்க் கலைச்சொல் அகராதி உருவாக்கி வெளியிட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் ஆணைப்படி, அகரமுதலி இயக்ககமானது, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்துடன் இணைந்து, துறைசார் வல்லுநர்களைக் கொண்ட குழுக்களை அமைத்து, ஆண்டுக்கொரு துறையைத் தேர்வுசெய்து கலைச்சொல் அகராதிகளை உருவாக்கி வெளியிடவுள்ளது.
அதன்படி நடப்பாண்டில், முதற்கட்டமாக மருத்துவக் கலைச்சொல் அகராதி உருவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மருத்துவக் கலைச்சொல் அகராதிக்காக இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைச்சொற்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அச்சொற்கள் குறித்துத் துறை சார்ந்த மருத்துவ அறிஞர்களின் கருத்துகளைப் பெறும் முயற்சியாக இக்கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
கல்வியை விடச் சிறந்த செல்வம் வேறு இல்லை. அத்தகைய கல்வியைத் தாய்மொழியில் கற்றால் அறிவு விரிவு பெறும், சிந்தனை ஆற்றல் மிகுதி பெறும். எல்லாக் கல்வியும் சிறந்தது தான் என்றாலும், உயிர்காக்கும் மருத்துவக் கல்வி முதன்மையானது. அந்தக் கல்வியைத் தாய்மொழியில் கற்றால் கற்போரின் செயல்திறனும், சிந்தனைத் திறனும், அறிவாற்றலும் பெருகும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மருத்துவக் கல்வியைத் தமிழில் கற்றுத் தருவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளார். அதற்கான பாடநூல்களைத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் எழுதி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், மருத்துவக் கலைச்சொல் அகராதியைத் தொகுத்து வெளியிடும் பொறுப்பு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்வியை ஆங்கில மொழியில்தான் கற்க வேண்டுமென்பதில்லை. இதற்கு முன்பாக, 1855 ஆம் ஆண்டில் சாமுவேல் ஃபிகிரின் மேல் நாட்டு மருத்துவத்தைத் தமிழ் மூலம் கற்க வைத்து 33 மருத்துவர்களை உருவாக்கினார். அதற்காக அவர் 24 தமிழ் மருத்துவ நூல்களை எழுதி வெளியிட்டார். அவரை முன்னோடியாகக் கொண்டு மருத்துவர் சாமி. சண்முகம், மணவை முஸ்தபா, பா. அருளி, மருத்துவர் நரேந்திரன், மருத்துவர் இளங்கோவன், கோவை மருத்துவர் முருகேசன் போன்றோர் ஏராளமான கலைச்சொற்கள் உருவாக்கியதோடு, தமிழில் மருத்துவப் பாடநூல்களையும் எழுதியுள்ளனர்.
ஆங்கில வழி மருத்துவத்தை ஆங்கில மொழியில் கற்பதை விட, தமிழ் மொழியில் கற்பது நமக்குப் புதியது அல்ல என்பதை மருத்துவ அறிஞர்களும், மாணவர்களும் உணர வேண்டும். வருங்காலத்தில் மருத்துவர்கள் தமிழ் வழிக் கல்வியை விருப்பத்தோடு கற்க முன்வர வேண்டும். மேலும், அகரமுதலி இயக்ககத்தின் சொற்குவை வலைத்தளத்தில் இதுவரை 8,92,874 சொற்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த வலைத்தளத்திலிருந்து ஆங்கில மொழியில் பயன்படுத்தப்பட்டு வரும் சொற்களுக்குச் சரியான தமிழ்ச் சொற்களை அறிந்து கொள்வதுடன், அதனை அனைத்துத் துறைப் பேராசிரியர்களும், அறிஞர்களும், மாணவர்களும் பயன்படுத்த முன் வர வேண்டும்” என்றார்.
மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்கள், உதவிப்பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் என பலநுாறு பேர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், மருத்துவக் கல்வி இயக்குநர் (சிறப்பு அலுவலர்) மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் அழ. மீனாட்சி சுந்தரம் சிறப்புரையாற்றினார்.
மருத்துவக் கலைச்சொல் அகராதித் தொகுப்புத் திட்ட மொழி வல்லுநர் முனைவர் மு. கண்ணன் நோக்கவுரையாற்றினார். மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் மருத்துவர் ச. எழிலரசன், நிலைய மருத்துவ அலுவலர் ம. ப. சந்திரா, தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில் அகரமுதலி இயக்ககத் தொகுப்பாளர் வே. பிரபு, பதிப்பாசிரியர் கி. தமிழ்மணி ஆகியோர் கலந்து கொண்டு அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சொற்குவை வலைத்தளம் குறித்து விளக்கமளித்தனர்.
முன்னதாக, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளர் மருத்துவர் கண்ணன் போஜராஜ் வரவேற்புரையாற்றினார். மருத்துவக் கல்லூரி உடலியங்கியல் துறை விரிவுரையாளர் மருத்துவர் செ. தனலட்சுமி அமுதன் நன்றி தெரிவித்தார்.