அரசு அதிகாரிகளின் மெத்தனமே வாலிபர் பலியாக காரணம்?
விபத்து நடந்த சி.சி.டி.வி., காட்சிகளை பார்த்த பின்னரே அதிகாரிகள் எவ்வளவு அலட்சியமாக இருந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழா தொடங்கி விட்டால், தேனி மாவட்ட அதிகாரிகள் துாக்கம் இன்றி தவிப்பதும் வழக்கம். குறிப்பாக கலெக்டரும், எஸ்.பி.,யும், இதர பொறுப்பான அதிகாரிகளும் ஓரு வாரம் துாங்கவே வாய்ப்பில்லை. அந்த அளவு விழா திடலில் கூட்டம் கூடும். குறைந்தது 2 லட்சம் பேர் முதல் 3 லட்சம் பேர் வரை ஒரே இடத்தில் 24 மணி நேரமும் குவிந்திருப்பார்கள். வெளியேறும் எண்ணிக்கைக்கு ஏற்ப, பக்தர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு பாதுகாப்பு, துப்புரவு, போக்குவரத்து, சுகாதாரம், குடிநீர், குளியல் என அத்தனை அடிப்படை வசதிகளையும் அதற்கு தேவையான பணிகளையும் மேற்கொள்ளும் முன்னர் தலை சுற்றி விடும்.
விழாத்திடலில் போலீஸ் அதிகாரிகள் மட்டுமின்றி, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, மின்வாரியம், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, மருத்துவத்துறை அதிகாரிகளும் முகாமிட்டு இருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ராட்டினம் அறுந்து விழுந்த விபத்தில் ஒரே நேரத்தில் ஆறு பேர் பலியாகினர். அடுத்து ஒருமுறை சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் பெரும் சேதம் இல்லை என்றாலும், சிறிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்டது. இந்த சம்பவங்களுக்கு பின்னர் விழாத்திடல் பாதுகாப்பு தொடர்பாக பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.
ஒருமுறை கலெக்டர் முத்துவீரனும், எஸ்.பி., பாலகிருஷ்ணனும் விழாத்திடலை ஆய்வு செய்தனர். அப்போது மரணக்கிணறு என்ற ராட்டினம் அமைக்கப்படுவதை பார்வையிட்டனர். அதனை இயக்க கூடாது என அந்த இடத்திலேயே தடை செய்து விட்டனர். அதேபோல் இதர ராட்டினங்களுக்கும், பொழுது போக்கு அம்சங்களுக்கும் பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, மின்வாரியம் என்.ஓ.சி., சான்று வழங்க வேண்டும். இப்படி சான்று வழங்கிய பின்னர் ஏதாவது விபத்து நடந்தால் அதற்கான காரணம் கண்டறியப்பட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என கலெக்டரும், எஸ்.பி.,யும், ஒரு சேர எச்சரித்தனர். இதனால் மிரண்டு போன அதிகாரிகள் அந்த ஆண்டு ஒரு வாரமும் எந்த பொழுது போக்கு அம்சங்களுக்கும் அனுமதிவழங்கவில்லை. இதனால் எந்த பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. அந்த அளவு பொதுமக்கள் பாதுகாப்பில் அதிகாரிகள் அக்கறை செலுத்தினர்.
தற்போது இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடைபெறாததால், மாவட்ட நிர்வாகமும், போலீஸ் நிர்வாகமும் சற்று அலட்சியம் காட்டி விட்டது. வீரபாண்டியில் நேற்று நடந்த மின்விபத்தில் முத்துக்குமார், 32 என்ற வாலிபர் பலியானார். விபத்து நடந்த சி.சி.டி.வி., காட்சிகளை பார்த்த பின்னரே அதிகாரிகள் எவ்வளவு அலட்சியமாக இருந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. சற்று சூழல் மாறியிருந்தாலும் பலி எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்திருக்கும். பொதுமக்கள் பல ஆயிரம் பேர் கூடிய பின்னர், எதற்கு மின் இணைப்பு பணிகளை செய்ய அனுமதித்தனர். வயறுகள் ஆங்காங்கே அறுந்து தொங்கிக்கொண்டிருந்தன. இதெல்லாம் சி.சி.டி.வி., காட்சிகளில் தெளிவாக தெரியவந்துள்ளது. மக்கள் கூடும் முன்பே அத்தனை பணிகளையும் மிகத்தெளிவாக விதிகளுக்கு உட்பட்டு முடித்திருக்க வேண்டும் என பொதுப்பணித்துறை, மின்வாரிய, தீயணைப்புத்துறையினர் சற்று கடுமை காட்டியிருந்தால் இந்த விபத்தையும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்பையும் தடுத்திருக்கலாம்.
கலெக்டர், எஸ்.பி., இனிமேலாவது கிடுக்குப்பிடி போட்டு, மக்களின் பாதுகாப்பிற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்த வேண்டும்.