தேனி கலெக்டர் அலுவலக அதிகாரிகளுக்கு தினமும் ''சிமிலி லட்டு'', இதில் இவ்வளவு இருக்கா ?
தேனி கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும், அதிகாரிகள், ஊழியர்களுக்கு தினமும் 'தினமும் ''சிமிலி லட்டு'' வழங்கப்பட்டு வருகிறது.;
தேனி கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகள் தினமும் ஒரு 'சிமிலி லட்டு' சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
இந்த 'சிமிலி லட்டு' உடலுக்கு சக்தியை தருவதோடு, கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆஞ்சநேயா மகளிர் சுயஉதவிக்குழு என்ற பெயரில் தலைவி சுதா தலைமையில் 15 பேர் கொண்ட மகளிர் குழுவினர் கேண்டீன் நடத்தி வருகின்றனர்.
இவர்கள் மிகவும் தரமான முறையிலும், சுவையாகவும், குறைந்த விலையிலும் அனைத்து உணவுகளையும் வழங்குவதால், ஒட்டுமொத்த கலெக்டர் அலுவலக ஊழியர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றுள்ளனர்.
இவர்களது கேண்டீனுக்கு அருகே (20 அடி தொலைவில்) மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அதிகாரிகளும் இந்த கேண்டீனில் உணவு சாப்பிடுவது வழக்கம். கொரோனா தொற்று காலத்திலும் இவர்கள் பணிக்கு வந்தனர். கேண்டீனும் செயல்பட்டது.
கொரோனாவிற்கு எதிராக உடலில் எதிர்ப்பு சக்தி கிடைக்கவும், நீண்ட நேரம் உற்சாகமாக பணிபுரியவும் உடலுக்கு எனர்ஜி தரும் வகையில் ஒரு உணவு தினமும் வேண்டும் என மகளிர் குழுவிடம் கேட்டுள்ளனர்.
அப்போது தான் மகளிர் குழு தலைவி சுதா, 'சார், எள்ளு, வேக வைத்த கேப்பை மாவு, (புட்டு) நாட்டுக்கருப்பட்டி, சுத்தமான செக்கு நல்லெண்ணை, ஏலக்காய், (இன்னும் சில பொருட்கள்) இவற்றை தினமும் இடித்து, மிகவும் சுவையான 'சிம்பிலி உருண்டை' அதாவது சிமிலி லட்டு செய்து தருகிறோம்.
கிராமங்களில் கர்ப்பிணிகளுக்கும், உடல் பலகீனமானவர்களுக்கும், நோயுற்றவர்கள் அதில் இருந்து மீளவும் இந்த உணவு நீண்ட நாட்களாக வழங்கும் பழக்கம் உள்ளது.
இந்த உருண்டையை தினமும் ஒன்று சாப்பிட்டால் போதும் அன்றைய நாளுக்கு உரிய முழு எனர்ஜியும் கிடைக்கும். தொடர்ந்த சாப்பிட்டால் உடலுக்கு நல்ல வலிமையும், எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்' எனக்கூறி பரிந்துரைந்தார்.
அதிகாரிகள் இதனை சோதனை முறையில் தயாரித்து வழங்குமாறு கேட்டுள்ளனர். சுதாவும் தயாரி்த்து கொடுத்துள்ளார். சாப்பிட்ட அதிகாரிகள் தினமும் தயாரித்து அத்தனை பேருக்கும் கொடுங்கள் என அறிவுறுத்தி உள்ளனர்.
அன்று முதல் இன்று வரை குறைந்தது 400 முதல் 500 பேர் வரை (தயாரிப்பை பொறுத்து, அதற்கு மேல் தயாரிக்க முடியவில்லை) இந்த சிமிலி உருண்டை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
தினமும் காலையில் வந்ததும் இந்த உணவினை சுதா தலைமையிலான மகளி்ர் குழுவினர் தயாரித்து விடுவார்கள். கலெக்டர் அலுவலக ஊழியர்கள் கேண்டீனுக்கு வரும் போது தலா ஒரு உருண்டை வாங்கிச் சாப்பிடுகின்றனர்.
ஒரு உருண்டை விலை 10 ரூபாய் மட்டுமே. அதுவும் தயாரிப்பு கூலி அளவுக்கு மட்டுமே. லாபம் கிடைக்காது. அத்தனை ஊழியர்களும் விரும்பி சாப்பிடுவதால் ஒரு நாள் கூட இதன் தயாரிப்பினை நிறுத்தி விடாதீர்கள் என அதிகாரிகளும், ஊழியர்களும் எங்களுக்கு அன்பு கட்டளை பிறப்பித்துள்ளனர்.
இதனை தினமும் தயாரிப்பது அவ்வளவு சுலபம் இல்லை. இருப்பினும் அதிகாரிகளுக்கு நாங்கள் தயாரித்து வழங்கி வருகிறோம் என்றார் தலைவி சுதா. இவர்களே அரிசி மாவு, ஓமம், சீரகம், பெருங்காயம், உப்பு, எள், காரப்பொடி உட்பட சில பொருட்கள் கலந்து இங்கு தயாரித்து விற்கும் முறுக்கும் (இந்த முறுக்கு சிங்கப்பூருக்கு செல்கிறது) அதிகாரிகள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது என மகளிர் குழுவினர் கூறியுள்ளனர்.